புதுவை அரசின் தொழிலாளர் கொள்கையைக் கண்டித்து தொழிற் சங்கங்கள் சார்பில் சட்டப்பேரவை நோக்கி வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.
ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அரசு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், அரசு கழகங்கள் ஆகியவற்றில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து விட்டன.
பஞ்சாலைகள் நலிந்து விட்டன. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான பணிமுறைப்படுத்துதல் சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியம் செயல்பாட்டுக்கு வரவில்லை. சிறு ஆலைகள் மூடல், லே ஆஃப், ஊதிய குறைப்பு தொடர்ந்து நடக்கிறது. கட்டுமான வாரியச் செயல்பாடுகள் செயலிழந்து விட்டன. சிறு தொழில்கள் மூடப்பட்டு வருகின்றன.
அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்தின் கொள்கை நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சட்டவிரோத ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ, வீட்டுவேலை, கடை ஊழியர், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் வாரியம் ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
பஞ்சாலைகளை மேம்படுத்தவும்,கைத்தறி தொழிலை காக்கவும் நிதி ஒதுக்க வேண்டும், குறைந்தபட்ச சம்பள நிர்ணயக் கமிட்டி, அமைப்புச் சாரா தொழிலாளர் வாரியத்தில் தொழிற் சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஏஐடியூசி தலைவர் நாரா.கலைநாதன், சிஐடியூ தலைவர் ஜி.ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். டியூசிசி பொறுப்பாளர் பாலு முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் டி.எம்.மூர்த்தி, வி.எஸ்.அபிஷேகம், யு.முத்து, ஜி.சுகுமாரன், வேகு.நிலவழகன், கே.லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.