புதுவை மாணவர்கள் பல்துறைகளில் சாதனை புரிய சிபிஎஸ்இ பாடத்திட்டம் தேவை என ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.பி. கூறியுள்ளார்.
ஆண்டியார்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை முன் மாதிரி பள்ளியாக உருவாக்க பள்ளியின் ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மைக் குழுவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக பல்வேறு தரப்பினரிடம் புத்தகங்களை நன்கொடையாகப் பெற்று பள்ளியில் நூலகத்தை உருவாக்கியுள்ளனர். தொடக்கப் பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள நூலகம் மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. தற்போது ஆசிரிய ர்கள் தங்களின் அடுத்த கட்ட முயற்சியாக விளையாட்டுப் பூங்காவையும், காணொளி மையத்தையும் உருவாக்கியுள்ளனர்.
இதற்காக புதுவையைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்களிடம் நன்கொடையைப் பெற்று விளையாட்டுப் பூங்காவையும், காணொளி மைய த்தையும் உருவாக்கியுள்ளனர். விளையாட்டுப் பூங்காவில் மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை உருவாக்கும் வகையில் டேபிள் டென்னிஸ், கேரம்போர்டு ஆகியவற்றுடன் ஊஞ்சல், சறுக்குமரம், சீசா பலகை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள காணொளி மையத்தில் திரையுடன் கூடிய புரொஜக்டர், லேசர் பிரிண்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமை வகித்து விளையாட்டுப் பூங்காவை திறந்து வைத்து பேசுகையில், சிபிஎஸ்இ பாடத் திட்டம் அரசு பள்ளிகளுக்கு தேவையான பாடத் திட்டம். அண்டை மாநில மாணவர்களைப் போல் புதுச்சேரி மாணவர்களும் சாதனை புரிய சிபிஎஸ்இ பாடத் திட்டம் அவசியம். அதை சொல்லித்தரும் ஆற்றல் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ளது.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் கூடுதலாக ஒரு பாடத்தை படிக்கப் போகிறோம். அவ்வளவுதான். முதல்வர் ரங்கசாமி வழிகாட்டுதலின்படி கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது என்றார் ஆர்.ராதாகிருஷ்ணன்.
பிப்டிக் தலைவர் அங்காளன் காணொலி மையத்தை திறந்து வைத்து பேசினார். பள்ளி கல்வித்துறை இயக்குநர் இ. வல்லவன், முதன்மைக் கல்வி அதிகாரி ஆர். கலைச்செல்வன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் பழனிச்சாமி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் பாட்சா ஆகியோர் பேசினர். முன்னதாக பள்ளி துணை ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார்.