சுடச்சுட

  

  ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாத கட்சிகளை புறக்கணிக்க திமுக வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 01st April 2014 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவிடாத காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது.

  இதுதொடர்பாக மாநில திமுக அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:

  நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி கடந்த 2009-ல் ரூ.2 கோடியாக இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு இந்நிதி ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் புதுவை எம்.பி.யான மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளில் ரூ.19 கோடியை ஒதுக்கியது.

  தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒவ்வொரு உறுப்பினரும் சாலை, குடிநீர், சமுதாயக்கூடம், அங்கன்வாடி, பள்ளிக் கட்டடங்களையும் கட்டித் தரலாம். கடந்த ஜூன் மாதம் மத்திய புள்ளியியல் மற்றும் அமுலாக்க பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்த தகவலை வெளியிட்டது.

  இதில் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தனக்கு ஒதுக்கப்பட்ட

  ரூ.19 கோடியில் வெறும் ரூ.6.5 கோடிக்கே பணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதில் ரூ.4.03 கோடிக்கு மட்டுமே திட்டங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டன.

  அதிலும் ரூ.1.52 கோடி மதிப்புள்ள திட்டங்கள் மட்டுமே முடிக்கப்பட்டன.

  தொகுதி மேம்பாட்டு நிதியில் வெறும் 38 சதவீதத்தை மட்டுமே நாராயணசாமிசெலவழித்துள்ளார்.

  தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவு செய்யாதவர்கள் 20 பேர் கொண்ட பட்டியலில் நாராயணசாமியும் ஒருவர். கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின் நாராயணசாமி தொடர்ச்சியாக 2009-10, 2010-11, 2011-12 ஆகிய 3 ஆண்டுகளில் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை. இது புதுவை மக்களுக்கு வேதனை தரும் செய்தியாகும். இதன் மூலம் தன்னை தேர்வு செய்த மக்களுக்கு அமைச்சர் நாராயணசாமி பாதிப்பு ஏற்படுத்தி உள்ளார்.

  அதே போல் மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு பைசாக்கூட செலவு செய்யவில்லை. இவர் பதவியேற்ற 3 ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எந்த பணிக்கும் பரிந்துரை செய்யவில்லை.

  தொகுதி மேம்பாட்டு நிதி செலவு செய்யாத காரணத்தால் அடுத்த ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதியையே மத்தியஅரசு கண்ணனுக்கு ஒதுக்கவில்லை. அதே சமயம் தான் பதவியேற்ற புதிதில் மாணவர் பேருந்துகள் வாங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்தார். ஆனால் மாணவர் பேருந்தையும் வாங்கவில்லை. எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை.

  தேர்தலை சந்திக்க வேண்டிய நேரத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி சில பணிகளுக்காக மட்டுமே பூமி பூஜை செய்துள்ளார்.

  என்.ஆர். காங்கிரஸ்: அதே போல என்.ஆர். காங்கிரஸ் அரசு மத்திய திட்டக்குழு ஒதுக்கிய நிதியில் 50 சதவீதம் வரை செலவு செய்யவில்லை. இதுபோன்று நிதியை செலவிடாமல் இருந்தால் புதுவை மாநிலம் எவ்வாறு வளர்ச்சி பெறும்? எனவே இரு கட்சிகளின் வேட்பாளர்களையும் வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai