சுடச்சுட

  

  சாராயக் கடையில் உணவுப்பொருள் விற்ற 2 பெண்கள் மர்மச் சாவு

  By புதுச்சேரி,  |   Published on : 01st April 2014 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அருகே சாராயக்கடையில் உணவுப் பொருள் விற்பனை செய்து வந்த இரு பெண்கள், மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  புதுவை கிருமாம்பாக்கம் அருகே மதிகிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த தங்கராசு மனைவி மச்சவள்ளி (63). அருகே உள்ள உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மனைவி அஞ்சலாட்சி (65). இவர்கள் இருவரும் உச்சிமேடு பகுதியில் உள்ள சாராயக் கடையில் கரி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்து வந்தனர்.

  ஞாயிற்றுக்கிழமை மாலை சாராயக் கடையிலிருந்து புறப்பட்ட இவர்கள் இருவரும், சாராயக்கடை அருகே உள்ள உச்சிமேடு சாலையோரம் மயங்கி விழுந்து கிடந்துள்ளனர்.

  தகவலறிந்து வந்த உறவினர்கள், அஞ்சலாட்சியை கடலூர் அரசு மருத்துவமனையிலும், மச்சவள்ளியை கிருமாம்பாக்கம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்துள்ளனர்.

  கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் போலீஸார் சாராயக்கடை மற்றும் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். விற்பனை முடிந்ததும் சாராயக்கடையில் மது அருந்தியுள்ள இருவரும், அவர்கள் கொண்டுவந்த மாமிச உணவை சாப்பிட்டதாகத் தெரிகிறது. கால தாமதமாக சாப்பிட்டதால் உணவு விஷமாகி உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

  சாராயக்கடையில் மது அருந்திய மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால், விஷச்சாராயமாக இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவு வந்த பின்னரே, உண்மை நிலவரம் தெரிய வரும் என கிருமாம்பாக்கம் போலீஸார் தெரிவித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai