சுடச்சுட

  

  வேட்பாளராக நாராயணசாமி தேர்வுக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியிலிருந்து மனோகர் விலகல்

  Published on : 02nd April 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை எனக்கூறி அக்கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ எஸ். மனோகர் செவ்வாய்க்கிழமை விலகினார்.

  உப்பளம் தொகுதியில் கடந்த 1996 முதல் 2001 வரை எம்எல்ஏவாக இருந்தவர் மனோகர். இவர் கதர்வாரியத் தலைவராகவும் இருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச் செயலராக உள்ளார்.

  தனது ஆதரவாளர்களான காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவு துணைத் தலைவர் பக்தவச்சலம், மாவட்டச் செயலர் கணேசன், உப்பளம் வட்டாரத் துணைத் தலைவர் குப்புசாமி, வட்டார பொதுச் செயலர்கள் லசார், விஷ்ணு, வட்டார இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் வீரராகவன், மங்கலம் வட்டாரச் செயலர் அன்பழகன் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

  இது குறித்து மனோகர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: புதுவை காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மிகுந்த மனவேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுவை காங்கிரஸ் தன்னிச்சையாக செயல்படுகிறது.

  தவறான தகவல்களை தலைமைக்கு கொடுத்து உண்மையான காங்கிரஸ்காரர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நிலை நடந்து வருகிறது. சோனியா, ராகுல் ஆகியோரின் எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பதில்லை. ஆனால் இவர்களுக்காக செயல்படுவது போன்ற பொய்யானத் தோற்றத்தை உருவாக்கி மேலிடத்துக்கு தவறான தகவல்களைக் கொடுத்து ஏமாற்றி வருகின்றனர்.

  கட்சியினரிடம் நேரடியாக விருப்ப மனு பெற்ற வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும். இதுதான் காங்கிரஸ் கட்சியின் நடைமுறை வழக்கம். ஆனால் புதுவை காங்கிரஸ் கட்சியில் கடந்த மாதம் நடந்த செயற்குழுவில் வருகை பதிவேட்டில் அனைவரிடமும் கையெழுத்து வாங்கி நாடாளுமன்றத் தேர்தலில் நாராயணசாமி போட்டியிடுவார் என தீர்மானத்தை வாசித்தனர்.

  இது தொடர்பாக யாரிடமும் எந்த கருத்தும் கேட்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நபரை முன்னிறுத்தி, யாரையும் கலந்து பேசாமல், தன்னிச்சையாகவும், எதேச்சதிகாரமாகவும் வேட்பாளரை முடிவு செய்தது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு புறம்பானது. கட்சி தலைவர்களை, நிர்வாகிகளை, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் புதுவை காங்கிரஸ் செயல்பட்டுள்ளது.

  கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தலைவர்களை உதாசீனப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு உள்ளது. தேர்தல் பணிக்குழுவையும் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் நியமித்துள்ளனர்.

  நாராயணசாமியின் கட்டளைக்கும், சட்ட திட்டங்களுக்கும் மட்டுமே கட்டுப்பட்டு புதுவை காங்கிரஸ் கட்சி கொத்தடிமையாகச் செயல்படுவதை என்னைப் போன்ற உண்மையான காங்கிரஸ் உணர்வுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே காங்கிரஸ் கட்சி என்ற போர்வையில் போலியாக செயல்படும் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்கள் வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளையும், அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறோம். இதற்கான கடிதத்தை கட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ளோம் என்றார் மனோகர்.

  புதுச்சேரி, ஏப். 1: புதுச்சேரி அடுத்த ஏம்பலம் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தலைமை வகித்து சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு பேசியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற கட்சியினர் அனைவரும் தீவிரமாகப் பாடுபட வேண்டும்.

  முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. ஆனால் இவற்றுக்கு எல்லாம் தேவையான நிதியைத் தராமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.

  இதற்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி தான் காரணம். புதுச்சேரியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் காமராஜர் கல்வி உதவித் தொகை, வீடு கட்டும் திட்டம், முதியோர் ஓய்வூதியம், ஒற்றை அவியல் அரிசி திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.

  ஆனால் இவற்றை முறையாக நிறைவேற்ற முடியவில்லை. வரும் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமையவும், புதுவைக்கு அதிக நன்மைகள் கிடைக்கவும். என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் ராஜவேலு.

  கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai