சுடச்சுட

  

  மோடி படத்துடன் பிரசாரம்: பாமக, என்.ஆர். காங்கிரஸ் போட்டி

  By புதுச்சேரி  |   Published on : 05th April 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியின் படத்தை வைத்து தேர்தல் பிரசாரம் செய்வதில் பாமக, என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக, ஐஜேகே கட்சிகள் உள்ளன. புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது.

  புதுச்சேரியில் பாமக சார்பில் ஆர்.கே.அனந்தராமனும், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். புதுவை பாஜக சார்பில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கப்படடுள்ளது.

  பாஜக தலைமை இதுவரை புதுச்சேரி வேட்பாளர் தொடர்பாக இறுதி முடிவை அறிவிக்காததால் மோடி படத்துடன் இரு கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. என்.ஆர்.காங்கிரஸýக்கு பாஜகவும், பாமகவுக்கு மதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

  தேமுதிக தவிப்பு: யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என தேமுதிக தலைமை அறிவிக்காததால் புதுவை மாநில தேமுதிகவினர் தவித்து வருகின்றனர். விரைவில் விஜயகாந்த் முடிவை தெரிவிப்பார் என மட்டுமே அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

  தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக தனது வேட்பாளரை ஏற்கெனவே அறிவித்து விட்டது. பாமக வேட்பாளர் அனந்தராமன் மோடி படத்துடன் பிரசாரம் செய்கிறார். மோடி பிரதமராக வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்கிறார். நாங்கள்தான் பாஜக கூட்டணியில் உள்ளோம். டெல்லி தலைமை அறிவித்தால்தான் ஏற்பேன் என்று அனந்தராமன் கூறுகிறார்.

  அவர் செவ்வாய்க்கிழமை கூட்டிய கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் மதிமுக மட்டுமே பங்கேற்றது. பாஜக, தேமுதிக, ஐஜேகே ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

  என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பாஜக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. மோடி படத்துடன் அவர்களும் பிரசாரம் செய்கின்றனர். பாஜக நிர்வாகிகள் இது குறித்து கூறியது:

  பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டோம். நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. நாங்கள் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறோம்.

  என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கேட்டதற்கு, வேட்பு மனுதாக்கல் செய்ய இன்னும் நாள்கள் உள்ளன. கூட்டணித் தொடர்பாக உறுதியான முடிவை அறிவிக்குமாறு பாஜக தலைமையிடம் பேச முதல்வர் முடிவு எடுத்துள்ளார். விரைவில் ராஜ்நாத் சிங்கிடம் பேசுவார் எனத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai