சுடச்சுட

  

  என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக இளைஞரணித் தலைவர் சக்திவேல் பதவியை ராஜிநாமா செய்து விட்டு சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

  புதுச்சேரி தொகுதியில் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சனிக்கிழமை முடிந்தது. இருப்பினும் பாஜக கூட்டணியில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

  தமிழகத்தில் கூட்டணியில் உள்ள பாமக புதுச்சேரியில் போட்டியிட வேட்புமனுவைத் தாக்கல் செய்தது.

  புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து மாநில பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் மதிமுக, தேமுதிகவில் ஒரு பகுதியினர் பாமகவிற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

  இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைமை சுயலாபத்திற்காக செயல்படுகிறது என குற்றம்சாட்டி மாநில இளைஞரணித் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்து நெருக்கடியை அளித்துள்ளார். பாஜக இளைஞரணித் தலைவர் சக்திவேல் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைத்தார்.

  இது குறித்து அவர் கூறியதாவது: நாடு முழுவதும் மோடியின் அலை வீசுகிறது. ஊழலற்ற நிர்வாகம் அமைய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். ஆனால் அந்த நோக்கத்துக்கு எதிர்மாறாக புதுச்சேரியில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

  இந்நிலையில் பாஜக தனித்துப் போட்டியிடுவதுதான் சிறந்தது என கருத்து கேட்கப்பட்டு கட்சியின் மாநில தலைமையிடம் தெரிவித்தோம். மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரனும் இது குறித்து கட்சி மேலிடம் உரிய முடிவெடுக்கும் எனக்கூறி காலம் கடத்தி வந்தார். தற்போது அவரது சுயலாபத்திற்காக புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இது மாநில வளர்ச்சிக்கும், பாஜகவுக்கும் ஏற்புடையதல்ல.

  இளைஞர்களின் ஒட்டுமொத்த எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார் சக்திவேல்.

  பிரசாரத்தின் போது மோடியின் படத்தை பயன்படுத்துவீர்களா எனக் கேட்டபோது, மோடி நாட்டின் சிறந்த தலைவர். அவரது படத்தை கட்சி வித்தியாசம் பாராமல் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai