சுடச்சுட

    

    புதுவையில் அடகு கடைக்காரர் கொலை: நகைகள் கொள்ளை

    By புதுச்சேரி  |   Published on : 06th April 2014 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் நகை அடகுக் கடைக்காரரை கொலை செய்து, நகைகளை சனிக்கிழமை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    புதுவை ரெயின்போ நகர் விரிவாக்கம் 4 ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராதேஷாம்ஜி (45). இவர், புதுவை நெல்லித் தோப்பு மெயின்ரோட்டில் நகை அடகுக் கடை வைத்துள்ளார். வழக்கம்போல் சனிக்கிழமை காலை 9 மணிக்கு கடைக்குச் சென்று, நகைகளை சரிபார்த்தபடி பணியைத் தொடங்கியுள்ளார்.

    அப்போது, மர்ம நபர்கள் சிலர் நகை அடகு வைப்பது போல் கடைக்குள் நுழைந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    திடீரென கடையின் கதவை உள்புறமாக மூடிய அவர்கள், ராதேஷாம்ஜியை கொலை செய்து விட்டு, கடையிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    கடை மூடியபடி இருந்ததால், இச்சம்பவம் உடனே வெளியே தெரியாமல் போனது. சிறிது நேரத்தில், பக்கத்துக் கடைக்காரரான சம்பத்ராஜ் பார்த்தபோது ராதேஷாம்ஜி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. உடனே அவர், ராதேஷாம்ஜியின் தம்பி சோகன்லாலுக்குத் தகவல் கொடுத்துள்ளார். கொள்ளை போன நகை, பணம் எவ்வளவு என்பது உடனடியாகத் தெரியவில்லை.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரவல்லபன், அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீஸார் சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

    உடலை புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், வழக்குப்பதிந்து மர்மக் கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிக்க புதுவை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்து போலீஸார் வாகனச் சோதனை நடத்தினர்.

    உடலை வாங்க மறுத்து போராட்டம்: இந்நிலையில், உறவினர்கள் மற்றும் நகை கடைக்காரர்கள், அடகு கடை உரிமையாளர்கள் குற்றவாளிகளைப் பிடிக்கும் வரை உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த காங்கிரஸ் வேட்பாளர் வி.நாராயணசாமி நேரில் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி பேசினார். இறந்த ராதேஷாம்ஜிக்கு, மஞ்சு என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai