சுடச்சுட

  

  மத்திய அரசு நிதியை தடுத்ததாக ரங்கசாமி பொய்ப் பிரசாரம்

  By புதுச்சேரி,  |   Published on : 06th April 2014 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி வராமல் நான் தடுத்ததாக முதல்வர் ரங்கசாமி பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார் என காங்கிரஸ் வேட்பாளர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.

  காலாப்பட்டு சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

  இக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான வி.நாராயணசாமி பேசியதாவது:

  எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கனகசெட்டிகுளம் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலைகளை மேம்படுத்தி தந்தேன். சின்னகாலாப்பட்டு பகுதியில் இடுகாடு பாதைக்கு வழிவகை செய்து கொடுத்தேன்.

  மேலும் மத்திய சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகம் சார்பில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் இளைஞர்கள் பயிற்சி பெறுவதற்கான தொழில் திறன் பயிற்சி மையம் தொடங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

  புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு நிதி வராமல் நான் தடுத்து விட்டதாக முதல்வர் ரங்கசாமி பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார். புதுவை மாநில நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியைத் தவிர தனியாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கி தந்துள்ளோம்.

  கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.647 கோடி நிதி பெற்றுத் தந்துள்ளேன்.

  2013-14-ல் நிதி நிலை அறிக்கையில் ரூ.2,750 கோடி செலவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் ரூ.750 கோடியை செலவழிக்காமல் திருப்பி அனுப்பினார்.

  புதுவை மேலும் முன்னேற்றமடைய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் நாராயணசாமி.

  இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஷாஜஹான், நமச்சிவாயம், புதிய நீதிக்கட்சித் தலைவர் பொன்னுரங்கம், படைப்பாளி மக்கள் கட்சி தங்கம், இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ரத்னவேல், ஆர்.ஜே.டி. தலைவர் சஞ்சீவி ஆகியோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai