சுடச்சுட

  

  இன்று புதுச்சேரியில் அடகுக் கடைகள் அடைப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 07th April 2014 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் அடகுக் கடை வியாபாரி ராதேஷ் ஷ்யாம்ஜி தூத் கொலையைக் கண்டித்தும், போலீஸாரின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் திங்கள்கிழமை நகை அடகு கடை வியாபாரிகள் கடை அடைப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

  புதுச்சேரி ரெயின்போ நகர் 4-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராதேஷ் ஷ்யாம்ஜி தூத் (45). இவர் நெல்லித்தோப்பு மெயின் ரோட்டில் உள்ள தனது நகை அடகுக் கடையிலேயே சனிக்கிழமை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிய வந்தது.

  இதுகுறித்து உருளையன்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆய்வாளர்கள் வீரவல்லவன், பாஸ்கர், வரதராஜன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறியதாவது:

  மர்ம நபர்கள் நகையை அடகு வைத்துள்ளனர். நகை குறித்து அடகு சீட்டில் ராதேஷ் எழுதியுள்ளார். பின்னர் பணத்தை எடுத்து வர உள்ளே சென்ற போது, மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, அடகு வைத்த நகை சீட்டையும் கிழித்து எடுத்துச் சென்று விட்டனர்.

  லாக்கரில் இருந்த நகைகள்,ரொக்கம் அதிகளவில் அப்படியே இருந்தன. அதனால், முன் விரோதத்தில் இக் கொலை நடந்திருக்கலாம். திசை திருப்ப சிறிது நகைகளை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளனர்.

  கடையில் கண்காணிப்புக் காமிரா பொருத்தப்படவில்லை.

  பல மாநிலங்களுக்கு தனிப்படையினர் சென்றுள்ளனர். மேலும் இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரிடம் விசாரித்துள்ளோம் என போலீஸார் தெரிவித்தனர்.

  வியாபாரிகளுடன் எஸ்.எஸ்.பி. ஓம்வீர் சந்திப்பு: புதுவை நகை கடை உரிமையாளர்கள், அடகு கடைக்காரர்கள் ஆகியோரிடம் சீனியர் எஸ்பி ஓம்வீர் சிங் ஞாயிற்றுக்கிழமை கொலையாளிகளை விரைவில் பிடிப்போம் என்றார்.

  இதில் வணிகர் சங்க கூட்டமைப்புத் தலைவர் சிவசங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, சீனியர் எஸ்.பி. விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அதனால் ஒட்டு மொத்த கடையடைப்புப் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். நகை அடகு கடையினர் கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளனர் எனக் குறிப்பிட்டனர்.

  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ராதேஷ் ஷியாம் இறுதிச் சடங்கு கருவடிக்குப்பம் மயானத்தில் நடைபெற்றது. பெரும்பாலான வியாபாரிகள், அவரது உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

  அடகுக் கடைகள் அடைப்பு: புதுவையில் திங்கள்கிழமை நகை அடகுக் கடைக்காரர்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பைத் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவிடம் மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai