சுடச்சுட

  

  புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகிய இரு சாமிகளை முன்வைத்து வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

  புதுவை மக்களவைத் தொகுதிக்கான மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சியின் வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தை தொடங்கி முதல்கட்டமாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஊர் பெரியவர்கள், சமூக தலைவர்கள் ஆகியோரை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தரும்படி கோரினர். புதுவை மட்டுமின்றி காரைக்காலிலும் இந்த சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

  இந்நிலையில், கடந்த மார்ச் 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதன்பிறகு பிரசாரம் கொஞ்சம், கொஞ்சமாகச் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திறந்த ஜீப்பில் தொகுதிவாரியாகச் சென்றும், செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியும் வேட்பாளர்களும், கட்சியின் முன்னணித் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  தொகுதி நிர்வாகிகளும் வீடு, வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

  பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ், பாமக ஆகிய இரு கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் குழப்பம் தொடர்ந்து வருகிறது.

  கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜகவோ, என்.ஆர். காங்கிரசை ஆதரித்துள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, ஐஜேகே ஆகியவை பாமகவை ஆதரிக்கிறது. தேமுதிக யாரையும் ஆதரிக்கவில்லை. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் பிரசாரத்தை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

  அமைச்சர் நாராயணசாமி: காங்கிரஸ் வேட்பாளரான மத்திய அமைச்சர் நாராயணசாமி தனக்குத்தானே பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். தான் தொகுதிக்கு செய்த சாதனைப் பட்டியலை வெளியிட்டும், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக முதல்வர் ரங்கசாமியும், பாஜகா நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  முதல்வர் ரங்கசாமி: முதல்வர் ரங்கசாமி தன்னுடைய பிரசாரத்தின்போது காங்கிரஸ் வேட்பாளரான நாராயணசாமி, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை தடுத்துவிட்டார் எனக் குற்றம்சாட்டியும், அவர் புதுவை மாநிலத்திற்கு எந்த பணிகளையும் செய்யவில்லை எனக் கூறியும் பிரசாரம் செய்து வருகிறார்.

  பாஜவினர் மோடி பிரதமராக வாக்களியுங்கள் என கேட்டும், மத்திய காங்கிரஸ் அரசை விமர்சித்தும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்திற்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுவை வந்து பிரசாரம் செய்துவிட்டுச் சென்றுள்ளார். அதிமுக ஆதரவாக நடிகர், நடிகைகள் பலரும் நாள்தோறும் ஒவ்வொரு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகின்றனர். செம்மலை எம்.பி.யும், மாநிலச் செயலாளர் அன்பழகனும் தொகுதிவாரியாக திறந்த ஜீப்பில் வேட்பாளர் ஓமலி ங்கத்துடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அதிமுக தனது பிரசாரத்தின் போது காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், திமுக ஆகிய 3 கட்சிகளையும் விமர்சித்தும், நாட்டின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா பிரதமராக வர ஆதரவு தாருங்கள் எனக் கோரியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  திமுக வேட்பாளர் நாஜிமுக்கு ஆதரவாக மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் மாநில நிர்வாகிகள், தொகுதி, அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவும், என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், அதிமுகவை விமர்சித்து பிரசாரம் செய்து வருகின்றனர். விரைவில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

  பாமக மாநில அமைப்பாளர் அனந்தராமன் பல்வேறு சமூக தலைவர்களையும் சந் தித்துவிட்டு 30ஆம் தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தில் என்.ஆர்.காங்கிரசையும், முதல்வர் ரங்கசாமியையும் கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளார்.

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திறந்த ஜீப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரு கிறார். நாட்டின் விலைவாசி உயர்வு, ஊழலை கட்டுப்படுத்த இடதுசாரிகளுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரி அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

  இவர்கள் தவிர ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட் (எம்.எல்.) மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். கொளுத்தும் வெயிலையும் பார்க்காமல் அனைத்துக் கட்சியினரும் ஒருவரையொருவர் விமர்சித்தும், தாக்கியும் பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரின் பிரசாரத்திலும் நாராயணசாமி, ரங்கசாமியின் பெயர்கள் தவறால் இடம்பெற்றுவிடுகின்றன.

  கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஏற்றபடி இவர்களை பாராட்டியும், தாக்கியும் தங்கள் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai