சுடச்சுட

  

  புதுச்சேரியில் அடகுக் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை நகை மற்றும் அடகுக் கடைகள் மூடப்பட்டன.

  புதுவையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நெல்லித்தோப்புப் பகுதியில், நகை அடகுக் கடைக்காரர் ராதேஷ் ஷ்யாம்ஜி தூத் (45), தனது கடையிலேயே சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 5 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், புதுவையில் வியாபாரம் செய்து வரும் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த ஜெயின் சமூகத்தினர், கொலைச் சம்பவத்தைக் கண்டித்து திங்கள்கிழமை தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் புதுவை நகரம் முழுவதும் நகை மற்றும் அடகுக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

  இதுதொடர்பாக நகை அடகுக் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நாகேஷ் கூறுகையில், புதுச்சேரியில் 500 நகை அடகுக் கடைகள், நூற்றுக்கும் மேற்பட்ட எலக்ட்ரிக்கல்ஸ் கடைகள் மற்றும் சில நகை கடைகள் ஆகியவற்றை மூடினோம். பாலாஜி நகரிலுள்ள சங்க அலுவலகத்தில் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தினோம். இக்கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர் என்றார்.

  தீவிர விசாரணை: இதுகுறித்து போலீஸார் கூறியது: புதுச்சேரியில் உள்ள முக்கிய ரவுடிகள் உள்பட சந்தேகத்துக்கு உள்பட்ட 18-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளோம்.

  பட்டியலை தயாரித்து அதன்படி விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

  அவர்களின் செல்போன் பேச்சுகளை கண்காணித்து வருகிறோம். புதுச்சேரியில் தங்கியிருந்த குற்றப் பின்னணி உடைய தமிழகப் பகுதியைச் சேர்ந்தோர் சிலரையும் கண்காணிக்கிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம் என போலீஸார் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai