சுடச்சுட

  

  புதுவை அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

  வில்லியனூர், அரியூர் அருகே உள்ள சிவராந்தகத்தைச் சேர்ந்தவர் பக்கிரி (70). இவர், ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இவரது, இறுதிச் சடங்கின்போது அருகே உள்ள காலனி தரப்பைச் சேர்ந்தவர்கள் மேளம் அடித்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் திங்கள்கிழமை மோதலாக மாறியது.

  போலீஸ் தடியடி: இது குறித்து தகவலறிந்த மங்கலம் போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த வந்துள்ளனர். இவர்களிடை, திங்கள்கிழமை இரவு மீண்டும் மோதல் ஏற்பட்டதால், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையிலான போலீஸார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் ஒரு போலீஸ்காரர் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

  இதனைத் தொடர்ந்து, சிவராந்தகம் குடியிருப்பு வீடுகளை, காலனியைச் சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அருகே உள்ள அரியூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற அப்பு உள்ளிட்ட சிலரையும் காலனி தரப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் எழும் சூழல் நிலவியது.

  சாலை மறியல்: இந்நிலையில், சிவராந்தக மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி புதுவை-வில்லியனூர் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை சர்க்கரை ஆலை அருகே மறியலில் ஈடுபட்டனர்.

  தகவலறிந்த வில்லியனூர் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதில், 5 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.

  சீனியர் எஸ்பி விசாரணை: இதனையடுத்து, புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஓம்வீர்சிங், கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவராந்தகத்தில் வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

  இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai