சுடச்சுட

    

    என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்: நாராயணசாமி

    By புதுச்சேரி,  |   Published on : 09th April 2014 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ரவுடிகளின் அட்டூழியத்தால் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி உருளையன்பேட்டை, உப்பளம் ஆகிய தொகுதிகளில் அவர் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் அரசு மீனவ மக்களுக்கு எந்தவித நல திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

    காங்கிரஸ் அரசில் அளித்து வந்த சலுகைகளை ஆட்சிக்கு வந்தவுடன் ரங்கசாமி நிறுத்தினார்.

    குறிப்பாக இலவச அரிசி, மீனவர் உதவித்தொகை, படகு வாங்க மானியம், டீசல் மானியம் போன்ற காங்கிரஸ் திட்டங்கள் அனைத்தையும் ரங்கசாமி நிறுத்தி மீனவ மக்களை அவர் வஞ்சித்து விட்டார்.

    சட்டப்பேரவை தேர்தலின்போது கடல் அரிப்பை தடுக்க தடுப்புச் சுவர் கட்டப்படும்,சுனாமி வீடு கட்டித் தரப்படும் எனக் கூறினார்.

    ஆனால் செய்யவில்லை. சுனாமி வீடு கட்ட வழங்கிய நிதியை தவறான வழியில் ரங்கசாமி செலவிட்டார். ரங்கசாமியை சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார் என கூறுவதற்கு அவர் தேர்தலுக்காக அமைத்துள்ள கூட்டணியே உதாரணம்.

    முஸ்லிம் மக்களுக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டது. முஸ்லிம் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

    சிறுபான்மை நலவாரியம் அமைக்கப்படும் என ரங்கசாமி கூறினார். ஆனால் அதை செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு நல வாரியம் அமைத்துத் தருவோம்.

    புதுச்சேரியில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு விட்டது. பட்டப்பகலில் கொலை நடக்கிறது. செயின் பறிப்பு, வீடு அபகரிப்பு, நில அபகரிப்பு, குழந்தை கடத்தல், ரவுடிகள் சிறையிலிருந்து மாமூல் கேட்டு போன் மூலம் மிரட்டுதல் அன்றாட நிகழ்வாகி விட்டது. ரவுடிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாத, சட்ட ஒழுங்கை சீரமைக்க தெரியாத ரங்கசாமி நிதியில்லை என காரணம் கூறுவார்.

    புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீரமைக்க குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பலமுறை கோரினேன்.

    ஆனால் ரங்கசாமி குண்டர் சட்டத்தை அமல்படுத்தாமல், பெண்களையும், மக்களையும் அச்சத்துடன் வாழ வைத்துள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி மலர காங்கிரசுக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்றார் நாராயணசாமி.

    எதிர்க் கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் ஆகியோர் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai