சுடச்சுட

  

  புதுவை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமிக்கு  தலித் இயக்கங்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

   தலித் இயக்கங்களின் அரசியல் கூட்டமைப்புத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மூர்த்தி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

   பாஜக தலைமையிலான அல்லது அவர்களின் ஆதரவு பெற்ற ஆட்சி அமைந்தால் அது தலித் மக்களின் நலனுக்கு எதிராக குறிப்பாக இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக செயல்படும் அரசாக அமைந்துவிடும். புதுவை மாநிலத்தில் பாரதீய ஜனதா அணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் 3 ஆண்டு ஆட்சியில் தலித் விரோத போக்கையே பின்பற்றி வருகிறது.

  தலித் மக்களுக்கான சிறப்புக்கூறு நிதியில் பெரும்பகுதி திசை மாற்றப்படுவதும், தலித் மேம்பாட்டிற்கான திட்டங்கள் முடக்கப்படுவதும், தலித்துகளின் வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவை கிடப்பில் போடப்படுவதிலும்தான் இந்த ஆட்சி குறியாக உள்ளது.

   இந்த கருத்துகளின் அடிப்படையில் புதுவையில் தலித் மக்களிடையே இயங்கி வரும் பல்வேறு சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து துவக்கிவுள்ள தலித் அரசியல் கூட்டமைப்பு பாரதிய ஜனதா அணிக்கு எதிராகவும், இந்த அணியை  வீழ்த்தும் செல்வாக்கு உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என முடிவெடுத்துள்ளோம்.

   தலித் மக்களின் கோரிக்கைகளான சிறப்புக்கூறு நிதி பயன்பாட்டிற்கு சட்ட வடிவம் தருதல், தனியார் துறையில் இடஒதுக்கீடு, உயர் பதவியில் இட ஒதுக்கீடு,  இலவச கல்வி, தலித் பெண்கள் பெயரில் மனைப்பட்டா உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற துணை நிற்பதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

   இதனால் காங்கிரஸ் வேட்பாளர்  நாராயணசாமிக்கு தேர்தல் பணியாற்ற முடிவெடுத்துள்ளோம்.

   இதற்காக புதுவை மாநிலத்தில் உள்ள  அம்பேத்கர் பேரவை, பீம்சேனா, அம்பேத்கர்  மக்கள் சங்கம், அம்பேத்கர் மக்கள் இயக்கம், தலித் குடிசை வாழ்வோர் பெருமன்றம்,  புதுவை மாநில அனைத்துத் தொழிலாளர் சங்கம், ஆதிதிராவிடர் முன்னேற்றச் சங்கம், தலித் மக்கள் பாதுகாப்பு சங்கம், தலித் விடுதலைப் பேரவை, புதுச்சேரி கிராம மேம்பாட்டுச் சங்கம், அருந்ததியர் முன்னேற்ற சங்கம், துப்புரவுத் தொழிலாளர் சங்கம், கிராம முன்னேற்றச்  சங்கம், தலித் விவசாய தொழிலாளர் சங்கம், அம்பேத்கர் அமைப்பு சாரா  தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்பினர் இணைந்து இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். அனைவரும் காங்கிரஸýக்கு தேர்தல் பணியாற்றுவோம் என்றார் மூர்த்தி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai