சுடச்சுட

  

  புதுச்சேரி தொகுதியில் பாமக வேட்பாளருக்கு தேமுதிக ஆதரவளிக்கும் எனத் தெரிகிறது.

  புதுவை தேசிய ஜனநாயக கூட்டணியில் உறுதியான முடிவு எட்டப்படாமல் குழப்ப நிலை நீடிக்கிறது. பாமக வேட்பாளர் ஆர்.கே.அனந்தராமன் மோடி படத்துடன் பிரசாரம் செய்து வருகிறார். அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் மோடி படத்துடனும், பாஜக மாநில நிர்வாகிகளின் ஆதரவுடன் பிரசாரம் செய்து வருகிறார்.

  புதுவையில் இரு தரப்பினரும் மோடி பிரதமர் வேட்பாளர் எனக் கூறி வாக்குச்  சேகரிக்கின்றனர்.

  இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன் கூறுகையில், மோடி படம், பாஜக சின்னம் மற்றும் கொடியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குத் தான் பயன்படுத்த உரிமையுள்ளது. பாஜக கூட்டணியில் புதுவை தொகுதி வேட்பாளர் என்.ஆர்.காங்கிரஸ்தான். தலைமையிடம் அதிகாரப்பூர்வ கடிதம் கேட்டுள்ளோம். பாமகவினர் பாஜக சின்னம், கொடி, மோடி படத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக தேசிய தலைமைக்கு புகார் தந்துள்ளோம். ஓரிரு நாளில் இப்பிரச்னை தீர்ந்து விடும் என்றார்.

  இதற்கிடையே வியாழக்கிழமை காலை தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களின் சந்திப்பு உள்ளதாக தகவல் தரப்பட்டது. கட்சித் தலைமை பாமகவுக்கு ஆதரவு தருமாறு கூறியுள்ளது எனத் தெரிவித்தனர். பின்னர் மாலையில் தான் இதுகுறித்து கட்சித் தலைமை தெரிவிக்கும்.

  இந்நிலையில், தேமுதிக அலுவலகத்துக்கு பாமக வேட்பாளர் அனந்தராமன் தனது ஆதரவாளர்களுடன் நண்பகலில் சென்றார். அவரை தேமுதிக மாநில பொறுப்பாளர் செல்வராஜ் வரவேற்றார். இதையடுத்து தேமுதிக, பாமக, மதிமுக, ஐஜேகே நிர்வாகிகளின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தேமுதிக மாநில பொறுப்பாளர் செல்வராஜ்  கூறியதாவது: புதுச்சேரியில் பாமகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான முடிவை தேமுதிக தலைமை விரைவில் தெரிவிக்கும். கட்சி நிர்வாகிகள் இணைந்து செயல்படுவோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இணைந்து பணியாற்றி ஆட்சியை பிடிப்போம் என்றார்.

  பாமக வேட்பாளர் அனந்தராமன் கூறியதாவது: பாஜக தலைமையிடத்தில் பேசியுள்ளோம். ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ வேட்பாளரை அவர்கள் தெரிவிப்பார்கள். பாஜக கூட்டணிக்காக தமிழகத்தில் பாமக பாடுபடுகிறது. தற்போது புதுச்சேரியில் பாமகவை தேமுதிக, மதிமுக, ஐஜேகே ஆகிய அனைத்துக் கட்சிகளின் ஆதரவு உள்ளது. விரைவில் பாஜகவும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

  நரேந்திர மோடி படத்தை பயன்படுத்தக் கூடாது என மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன் கூறுவதற்கு எந்த உரிமையும் இல்லை. அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர். அதனால் நாங்கள் மோடி படத்தை பயன்படுத்துவோம் என்றார்.

  மதிமுக செயலர் ஹேமா பாண்டுரங்கன், ஐஜேகே அமைப்பாளர் சத்தியவேல்,  தேமுதிக மாநில பொறுப்பாளர் அசோக்பாபு ஆகியோரும் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai