சுடச்சுட

  

  இடதுசாரி இயக்கங்கள் வளர்ச்சியைத் தடுக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் சதி

  By புதுச்சேரி,  |   Published on : 12th April 2014 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவில் இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சியைத் தடுக்க பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் து.ராஜா எம்பி தெரிவித்துள்ளார்.

  புதுச்சேரியில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதற்கு மக்கள் தீர்ப்பளிக்கக் கூடிய தேர்தலாக இது விளங்குகிறது.

  காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கையால் நாடு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதன் விளைவாக விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. மக்களும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.

  அதே நேரத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வரத் துடிக்கிறது. பாரதிய ஜனதா கட்சியால் முன்னிறுத்தப்படும் வேட்பாளர் மோடி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வேட்பாளர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தனக்கு நடந்த திருமணத்தை பகிரங்கமாக அறிவிக்காமல் சட்டரீதியான நெருக்கடி வரும்போது மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் எத்தகைய ஒழுக்கத்தை பெற்றுள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதவாத அரசு அமைவதை மக்கள் தடுக்க முன்வர வேண்டும்.

  காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத மாற்று அரசு உருவாக வேண்டும் என்பதில் இடதுசாரி கட்சிகளின் குறிக்கோளாக உள்ளது.

  அதிமுக கூட்டணியில்தான் இடதுசாரிகள் இடம் பெற்றிருந்தன. அந்த கூட்டணியிலிருந்து எதற்காக விலக்கப்பட்டோம் என்பதற்கான விளக்கத்தை கூட அதிமுக தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா தனது பிரசாரத்தின் போது பாரதிய ஜனதாவையோ, மோடியையோ விமர்சிக்கவில்லை.

  இடதுசாரிகள் வலிமையுடன் இருந்தால் தாங்கள் நினைத்ததை செய்ய முடியாது என்பதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கள் வளர்ச்சியைத் தடுக்கும் விதத்தில் செயல்பட்டு வருகின்றன. இடதுசாரிகள் மீண்டும் எழுச்சி பெறுவோம். இந்தியாவை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.

  தமிழகம் மற்றும் புதுவையில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி நாங்கள்தான் என்பதை தேர்தலின் முடிவு வெளிப்படுத்தும் என்றார் ராஜா.

  பேட்டியின் போது வேட்பாளர் ஆர். விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai