சுடச்சுட

  

  புதுவையை அடுத்த ஊசுடு பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஓமலிங்கம் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

  அவரை ஆதரித்து அதிமுக மாநில செயலர் ஆ.அன்பழகன் பேசியதாவது: புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசு அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்னைகளையும் தீர்க்க முடியாமல் செயலற்ற அரசாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கு ஒன்றும் செய்யாத முதல்வர் தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் வாக்குச் கேட்டு வருகிறார்.

  சுனாமியால் பாதிக்கப்பட்ட காலாப்பட்டு மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படவில்லை. கிராமங்கள் வளர்ச்சி பெறவில்லை. சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக விவசாயிகளை ஏமாற்றி நிலம் எடுக்கப்பட்டது. ஆனால் அத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. கரசூர், சேதாரப்பட்டு கிராமங்களில் விவசாயிகளிடமே மீண்டும் நிலம் வழங்க வேண்டும்.

  நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களையே நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் அமுல்படுத்தி உள்ளார் முதல்வர்.

  ஆட்சியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அதிமுக மக்களுக்காகப் பாடுபடும் இயக்கம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய இலவச வேட்டி-சேலை கூட கிடைக்கவில்லை.

  ஊசுடு தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன் குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்தும் ஒரு வீடு கூட கட்டப்படவில்லை.

  இத்தொகுதியில் 6000 குடிசை வீடுகள் இருந்தும் ஒரு வீடு கூட கல் வீடாக கட்டப்படவில்லை. மத்திய அமைச்சர் நாராயணசாமி தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதுவைக்கு ஒரு நல்ல திட்டத்தையும் செய்யவில்லை. தற்போது மாநில அரசை குறைகூறி வருகிறார்.

  இந்தியா வல்லரசாக மாற அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அன்பழகன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai