சுடச்சுட

  

  தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டு பிரசாரம்

  By புதுச்சேரி  |   Published on : 12th April 2014 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் பாமக வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பாஜகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

  அதேபோல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் புதுவையில் அனந்தராமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரம் செய்கிறார்.

  அவருக்கு ஆதரவாக மதிமுக, ஐஜேகே, கொங்குநாடு மக்கள்கட்சி உள்ளிட்டவை பிரசாரம் செய்து வருகின்றன. தேமுதிக நிலை மட்டும் தெரியாமல் இருந்தது.

  பாமவுக்கு ஆதரவு: இந்நிலையில் புதுவை பாமக வேட்பாளருக்கு தேமுதிக ஆதரவு தரும் என கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இந்நிலையில் தேமுதிகவும் வெள்ளிக்கிழமையன்று பாமகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

  இதையடுத்து, வெள்ளிக்கிழமை நண்பகல் பாமக வேட்பாளர் அனந்தராமன் தேமுதிக அலுவலகத்துக்கு வந்தார். தேமுதிக மாநில பொறுப்பாளர்கள் செல்வராஜ், அசோக்பாபு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

  பின்னர் மாநில பொறுப்பாளர் செல்வராஜ் கூறியதாவது:

  புதுச்சேரியில் பாமகவுக்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது. எங்கள் கட்சித் தலைமை இதற்கான கடிதத்தை வெளியிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்வார். இனி, விஜயகாந்த் படம் மற்றும் தேமுதிக கொடியை பாமக தவிர மற்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது. மீறி என்.ஆர்.காங்கிரஸ் பயன்படுத்தினால் தேர்தல் ஆணையத்தில் புகார் தருவோம். அந்நிலை தொடர்ந்தால் நாங்களே கொடிகள், படங்களை பறிமுதல் செய்வோம் என்றார்.

  பின்னர் பாமக வேட்பாளர் அனந்தராமன் கூறியதாவது:

  வரும் 13-ம் தேதி டாக்டர் அன்புமணியும், 16-ம் தேதி ராமதாஸும் பிரசாரத்துக்கு வருவார்கள். புதுச்சேரி பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் நடந்து வருகிறது. அதில் விரைவில் முடிவு எட்டப்படும். விரைவில் எங்கள் கூட்டணிக்கு பாஜகவும் வர வாய்ப்புள்ளது. ஓரிரு நாளில் கண்டிப்பாக சுமூக முடிவு ஏற்படும். அதையடுத்து, அனைத்துக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

  மோடி படம், பாஜக கொடியை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன் கூற அதிகாரமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர் ராஜ்நாத் சிங்-க்குத்தான் உரிமை உள்ளது. கூட்டணியின் நிலையைக் கருத்தில் கொண்டு பாஜக மாநில நிர்வாகிகளும் விரைவில் பாமகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வர வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai