சுடச்சுட

  

  மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வீட்டருகே பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைதான 4 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

  புதுவையில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டின் அருகில் கடந்த ஜனவரி 29-ம் தேதி காருக்கு அடியில் மர்மநபர்கள் பைப் வெடிகுண்டு வைத்திருந்தனர். இந்த வழக்கு புதுவை போலீஸாரிடமிருந்து, தேசியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

  இது குறித்து வழக்குப்பதிவு செய்து, என்ஐஏ துணைக் காவல் கண்காணிப்பாளர் ஷர்மா, இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதேபோல், மதுரையில் பைப் வெடிகுண்டு வைத்திருந்த வழக்கில் தேவகோட்டையைச் சேர்ந்த கவியரசன் (33), திருச்செல்வம் (36), காளைலிங்கம் (34), தங்கராஜ் என்கிற தமிழ்வாணன் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த இவர்கள், புதுவையிலும் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டு, கடந்த புதன்கிழமை புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, என்ஐஏ டிஎஸ்பி ஷர்மா, புதுவை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

  வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முதன்மை நீதிபதி சி.எஸ். முருகன் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கினார்.

  விசாரணைக்குப் பின்னர், ஏப்ரல் 17-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் அவர்களை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் உத்தரவில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர், கவியரசன் உள்ளிட்ட 4 பேரையும் காலாப்பட்டு மத்திய சிறையிலிருந்து காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai