சுடச்சுட

  

  ஆதாயத்திற்காக அணிமாறி ஆதரிக்கும் புதுவைத் தொகுதி கூட்டணி கட்சிகள்: எதிரணிக்கே சாதகமாகும் சூழல்

  By புதுச்சேரி,  |   Published on : 13th April 2014 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் ஆதாயத்திற்காக அணி மாறி ஆதரிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள் எதிரணிக்கே ஆதரவாக அமையும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

  புதுவை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் ஆகிய பிரதான கட்சிகள் எப்போதும் இல்லாத வகையில் தனி அணிகளாக போட்டியிடுகின்றன.

  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளதாக கூறப்படும் என்ஆர் காங்கிரசும், அதே கூட்டணியில் உள்ள பாமகவும் தனித்தனியாக வேட்பாளர்களை களமிறக்கி போட்டியிடுகின்றன.

  ஒரே கூட்டணியில் உள்ள இவர்கள், எதிரெதிராக களமிறங்கியுள்ளது அக்கூட்டணி கட்சியினரை குழப்பத்தில் ஆழ்த்தியது. இக்கூட்டணியில் தொடக்கத்திலிருந்தே குழப்பம் நீடித்து வருகிறது. கூட்டணி இருந்தாலும், புதுவையில் தனித்து போட்டியிடுவது உறுதியென ஏற்கனவே தெரிவித்தபடி பாமக வேட்பாளர் அனந்தராமன் பிரசாரத்தில் தொடர்ந்து வருகிறார்.

  ஆரம்பத்தில் பாஜக, மதிமுக, தேமுதிக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் என்ஆர் காங்கிரஸை ஆதரித்து பணிகளைத் தொடங்கியது. இதில், ஆரம்பத்திலேயே பாமகவை ஆதரிப்பதாக கூறி மதிமுக விலகிக்கொண்டது.

  இரு வேறு கருத்துக்களுடன் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருந்த தேமுதிக வினர்,  இறுதியாக விஜயகாந்த் அறிவிப்பையடுத்து, பாமகவை ஆதரிப்பதாக தெரிவித்து பிரசாரத்தில் இணைந்துவிட்டனர்.

  ஐஜேகே வினரும், பெரம்பலூரில் போட்டியிடும் கட்சி நிறுவனர் பாரிவேந்தரின் வெற்றிக்கு, கூட்டணி கட்சியான பாமக வினர் சிறப்பாக செயல்படுவதால், புதுவையில் பாமகவை ஆதரிப்பதாக தெரிவித்து அணி மாறினர்.

  தற்போது பாஜக மட்டுமே என்ஆர் காங்கிரசுடன் கூட்டணி என்ற உறுதியான நிலைப்பாடுடன், என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறது.

  இதர கூட்டணிக் கட்சிகள் அணி மாறி, பாமக வேட்பாளர் அனந்தராமனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுவை மக்களவைத் தொகுதியில் குழப்பமான சூழலே தொடர்கிறது.

  பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, மதிமுக, ஐஜேகே கட்சிகளுக்கு தமிழகத்தில் பாமக வினரின் ஆதரவு ஆதாயம் உள்ளதாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட அக்கட்சிகள், கூட்டணி தர்மங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, புதுவையில் பாமக வை ஆதரிப்பதாக அறிவித்து செயல்படுகிறது.

  புதுவையில் மட்டுமே உள்ள என்ஆர் காங்கிரஸ் கட்சியினால் தேமுதிக, மதிமுக, ஐஜேகே கட்சிகளுக்கு பெரிய அளவில் ஆதாயம் கிடைக்கப்போவதில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக வுடன் கூட்டணி வைத்த ரங்கசாமி, ஆட்சி அமைக்கும்போது கழற்றிவிட்டார்.

  அதிமுகவிற்கே இந்த கதி என்றால், ரங்கசாமியை ஆதரித்து, எந்த பதவிகளையும் எதிர்காலத்தில் பெறமுடியாதென கருதிய தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், என்ஆர் காங்கிரஸை ஆதரிக்காமல் பாமகை ஆதரித்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

  புதுவை பாஜக பொருத்த வரையில், தலைவர் விஸ்வேஸ்வரனுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படுமென்ற மறைமுக உடன்பாடில், என்ஆர் காங்கிரஸை உறுதியாக ஆதரிப்பதாக பேசப்படுகிறது.

  இதனை மெய்ப்பிக்கும் வகையில், பாஜகவின் கொடிகள், மோடி படங்களை பயன்படுத்தக்கூடாதென புதுவை பாஜக வினர் பாமக வினரை எச்சரித்துள்ளனர். இதனை கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் கூற வேண்டும், இங்குள்ளவர்களுக்கு அதிகாரம் கிடையாதென புதுவை பாமக வேட்பாளர் அனந்தராமனும் இதற்கு பதில் தெரிவித்துள்ளார். இதனால், பாஜக, பாமக நிர்வாகிகளிடையே அறிக்கைப் போர் நடந்து வருகிறது.

  இதனால் புதுவை மக்களவைத் தொகுதியில் ஆதாயத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணயினர் அணிகளை மாறி ஆதரவைத் தெரிவித்து குழப்பத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த குழப்ப நிலை, எதிராக களத்தில் உள்ள நாராயணசாமிக்கே ஆதரவாக அமையும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai