சுடச்சுட

  

  எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களால் வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள் - புதுவை காங்கிரஸ் கட்சி தலைவர் புகார்

  By காரைக்கால்  |   Published on : 13th April 2014 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களால் புதுவையில் வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள், தோல்வி பயத்தால் இவ்வாறு நடந்துகொள்வதாக புதுவை பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கூறினார்.

  காரைக்காலில் புதுவை வேட்பாளர் வி.நாராயணசாமிக்கு ஆதரவாக சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது செய்தியாளர்களிடம் அவர் கூறியது : புதுவையில் இன்னும் 2 ஆண்டுகள் ஆட்சி நீடிக்குமெனக் கூறி ஆளும்கட்சி, எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள், வாக்காளர்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டுமென மிரட்டுகிறார்கள்.

  கடந்த 3 ஆண்டுகளில் மாநில அரசின் செயல்பாடுகளால் மக்கள் சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாகியிருக்கும்போது, கூடுதலாக மிரட்டும் பாணியை கையாண்டுவருவதை பேரவை உறுப்பினர்கள் கைவிடவேண்டும். இது ஜனநாயக விரோத செயலாகவே காங்கிரஸ் கருதுகிறது.

  யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை ரகசியமாக கண்காணிப்போம் என அப்பேரவை உறுப்பினர்கள் மக்களை அச்சமடைய செய்கின்றனர். இது புதுவையில் வி.நாராயணசாமி வெற்றி உறுதியை தெரிந்துகொண்டு, தோல்வி பயத்தில் இவ்வாறான அநாகரீக செயலை செய்கிறார்கள். மக்கள் இதனை நன்கு புரிந்துகொண்டுள்ளனர். தோல்வி பயத்தில் உள்ளவர்களுக்கு சரியான பாடத்தை வாக்காளர்கள் புகட்டுவார்கள். குறிப்பாக புதுவையில் நாராயணசாமி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். மக்களவையில் சிறப்பான பணியை நாராயணசாமி மட்டுமே செய்யமுடியுமென புதுவை மக்கள் கருதுகிறார்கள்.

  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் காரைக்காலில் ரூ.25 கோடி செலவு செய்துள்ளார் என திமுக வேட்பாளர்  கூறியுள்ளார். இதற்காக தேர்தல் துறையினரிடம் பொய் புகார் அளித்துவருகின்றனர். தேர்தல் துறையினர்  காங்கிரஸார் வீடுகளில் சோதனை செய்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த போக்கை காங்கிரஸூம் கையில் எடுத்தால்  அதனால் பாதிக்கப்படுவது குற்றம்சாட்டும் கட்சியாகும்.

  காங்கிரஸ் கட்சி மட்டுமே எந்தவொரு பெரிய கட்சியுடனும் கூட்டணியின்றி தேர்தலில் போட்டியிடுகிறது. இது வரும் பேரவைத் தேர்தலிலும் தொடரும்.பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, ஆட்சியை பிடிக்கும். இதனையெல்லாம் அறிந்த என்.ஆர்.காங்கிரஸ், திமுக ஆகியவை காங்கிரஸ் வெற்றியை தடுக்க முயற்சிக்கிறது. இதில் அவர்களால் வெற்றிபெறமுடியாது என்றார் ஏ.வி.சுப்ரமணியன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai