சுடச்சுட

  

  இரு சாமிகளின் சண்டையில் திட்டங்கள் முடங்கிப் போயுள்ளன

  By புதுச்சேரி,  |   Published on : 14th April 2014 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இரு சாமிகளுக்கு இடையிலான சண்டையால் புதுவைக்கான திட்டங்கள் முடங்கிப்போயுள்ளன என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

  புதுவை தொகுதி பாமக வேட்பாளர் அனந்தராமனை ஆதரித்து அன்புமணி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார். கதிர்காமம் அரசு மருத்துவமனை, வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அன்புமணி பேசியது:

  மோடி பிரதமராவது உறுதியாகி விட்டது. ஏனெனில் இந்தியாவில் ஒரே ஒரு பிரதமர் வேட்பாளராக மோடி மட்டுமே முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

  பிற கட்சிகள் யாரையும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை.

  மோடி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இதனால் நானும், அனந்தராமனும் அவரிடம் சென்று புதுவைக்கு வேண்டிய மாநில அந்தஸ்தை உரிமையுடன் கேட்டு பெற்றுத் தருவோம்.

  ஜிப்மருக்கு ரூ.ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி மேம்படுத்தியுள்ளோம். ஜிப்மரை பாதுகாக்க தன்னாட்சி நிறுவனமாக தனி சட்டமே கொண்டுவரப்பட்டது. புதுவை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையை இஎஸ்ஐ நிறுவனத்திடம் ரூ.140 கோடிக்கு விற்க திட்டமிட்டனர். இதை நான்தான் தடுத்து நிறுத்தினேன்.

  பொது இடங்களில் புகை பிடிக்க தடையைக் கொண்டு வந்தது நான் தான்.

  நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் நான்தான். இன்று 23 மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றி வருகிறது.

  புதுவையில் எந்த முன்னேற்றமும் இல்லை. புதுவையில் உள்ள ஒரு சாமி நிதி வரக் கூடாது என தடுக்கிறார். மற்றொரு சாமி வந்த நிதியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்புகிறார்.

  இந்த இரு சாமிகளின் சண்டையால் புதுவையின் அனைத்துத் திட்டங்களும் முடங்கிப் போயுள்ளன.

  நாங்கள் வெற்றி பெற்றால் புதுவையில் தற்போது உள்ள 50 சதவீத இடஒதுக்கீடை 69 சதவீதமாக உயர்த்துவோம். புதுவை சுற்றுலாவை கோவாவை விட 10 மடங்கு மேம்படுத்துவோம் என்றார் அன்புமணி.

  இப் பிரசாரத்தின் போது பாமக வேட்பாளர் அனந்தராமன், தேமுதிக பொறுப்பாளர்கள் செல்வராஜ், அசோக்பாபு, மதிமுக பொறுப்பாளர் ஹேமா பாண்டுரங்கன், இந்திய ஜனநாயகக் கட்சி அமைப்பாளர் சக்திவேல், பாமக ஆலோசகர் ராமகிருஷ்ண கவுண்டர், வடிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai