சுடச்சுட

  

  சட்டம் ஒழுங்கு குறித்து பேச திமுகவுக்குத் தகுதி இல்லை: அதிமுக

  By புதுச்சேரி,  |   Published on : 14th April 2014 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்துப் பேச திமுகவினருக்கு எந்த தகுதியும் இல்லை என அதிமுக மாநிலச் செயலர் ஆ.அன்பழகன் கூறியுள்ளார்.

  புதுவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும், முதல்வர் ரங்கசாமியும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வருகின்றனர். மத்திய அமைச்சரான நாராயணசாமி 23 ஆண்டுகள் எம்பி-ஆக இருந்த அவர் புதுவையின் நலனுக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

  முதல்வர் ரங்கசாமி கடந்த 2011 தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஆதரவோடு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். ஆனால் அதன் பின்னர் நம்பிக்கைத் துரோகம் இழைத்து விட்டார்.

  தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக தனி மாநில அந்தஸ்து குறித்து பேசி வருகிறார்.

  கடந்த 1998-ல் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசிலேயே முதல்வர் ஜெயலலிதா வற்புறுத்தியதால் புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து அறிவிப்பு நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் அதன் பின் ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கைகூடவில்லை.

  திமுக நாடகம்: கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசில் திமுக முக்கிய அங்கம் வகித்தது. ஆனால் மாநில அந்தஸ்துக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என அதன் பொருளாளர் ஸ்டாலின் பிரசாரம் செய்வது விந்தையாக உள்ளது.

  புதுவையில் திமுக ஆட்சியின் போது தான் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடு மற்றும் நிலம் அபகரிக்கும் செயல் தொடங்கியது. வெடிகுண்டு கலாசாரம் பரவி வருவதாக திமுகவினர் கூறி வருகின்றனர். முதலியார்பேட்டை காவல் நிலைய வெடி குண்டு வழக்கில் தொடர்புடையோர் அக்கட்சியில் தான் உள்ளனர்.

  குறைந்த விலையில் குடிநீர்: தமிழகத்தில் ரூ.10-க்கு குறைந்த விலையில் குடிநீரை அரசே விற்பனை செய்கிறது. இது குறித்து ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆனால் கடந்த 1996-ல் பாசிக் நிறுவனம் மூலம் திமுக அரசு குடிநீரை விற்பனை செய்ததை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

  முறையற்ற கூட்டணி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி முறையற்ற கூட்டணியாக உள்ளது.

  என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கட்சிகள் தனியாக செயல்படுகின்றன. ஏனைய தேமுதிக, பாமக, மதிமுக, ஐஜேகே கட்சிகள் தனியாக செயல்படுகின்றன. கூட்டணி கட்சிகளைக் கூட முதல்வர் அரவணைத்துச் செல்லவில்லை.

  தேர்தல் துறை பாரபட்சம்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறக்கக் கூடாது என பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். அதன்படி அலுவலகம் திறக்கப்படவில்லை.

  ஆனால் இதற்காக மாநிலப் பொருளாளர் பாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் துறை பாரபட்சமாக செயல்படக் கூடாது. எங்கள் மீதான வழக்கை சட்டப்படி சந்திபோம் என்றார் அன்பழகன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai