சுடச்சுட

  

  மெகா நிலக்கரி ஊழல்: கட்சிகள் மௌனம் காப்பதேன்?  சுயேச்சை வேட்பாளர் ராமதாஸ் கேள்வி

  By  புதுச்சேரி,  |   Published on : 16th April 2014 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காமன்வெல்த், 2ஜி போன்று புதுவையில் ரூ.3,500 கோடி இழப்பை ஏற்படுத்திய நிலக்கரி ஊழல் குறித்து அரசியல் கட்சியினர் மௌனம் காப்பது ஏன் எனமுன்னாள் எம்பியும், பேராசிரியருமான ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
   புதுவை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
   மத்திய அமைச்சர் நாராயணசாமி 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்து சாதனை படைத்ததாக தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில், புதுவை மாநிலத்துக்கு ரூ. 11 ஆயிரத்து 250 கோடி மத்திய அரசிடமிருந்து நிதியைப் வாங்கிக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் சிதம்பரமோ, ரூ.1,817 கோடி வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். உண்மையில் புதுவைக்கு ரூ.1,660 கோடி மட்டுமே மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.
   கடந்த 2009-10ஆம் நிதியாண்டில் ரூ.2,250 கோடி வாங்கி கொடுத்துள்ளதாக பொய் கூறியுள்ளார். ஆனால், ரூ. 258.4 கோடிதான் வழங்கினர். இதனால்தான் நிதி நெருக்கடி ஏற்பட்டது. மாநில அரசு நினைத்திருந்தால் இந்த நிதி நெருக்கடியை சரி செய்திருக்கலாம், அதற்கான வாய்ப்பு இருந்தும் செய்யவில்லை.
   கடந்த 2007ஆம் ஆண்டு நான் எம்பியாக இருந்தபோது, புதுவையில் மின் பற்றாக்குறையை சரி செய்வதற்காக, மத்திய அமைச்சர் ஷிண்டேவை சந்தித்து கோரிக்கை வைத்தேன். அதற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் வழங்க முடியாது, மாற்றாக நிலக்கரி வழங்குவதாக தெரிவித்தார்.
   அதன்படி ஒரிசா மாநில சுரங்கத்திலிருந்து, ஆண்டுக்கு 250 டன் நிலக்கரி வழங்க ஒப்புதல் வழங்கினர். இந்த நிலக்கரியை புதுவை அரசு பயன்படுத்தியிருந்தால், 1,980 மெகாவாட் மின் உற்பத்தி செய்திருக்க முடியும். இதில், நமக்கு 430 மெகாவாட் மின்சாரமே போதுமானதாகும். மீதமுள்ள மின்சாரத்தை விற்பனை செய்து ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வருமானமும் கிடைத்திருக்கும்.
   ஆனால் நிலக்கரி உரிமத்தை தனியாருக்கு வழங்கி டன் ரூ.250-க்கு விற்பனை செய்துவிட்டனர். இந்த அனுமதியை நெய்வேலி என்எல்சிக்கு கொடுத்திருந்தால், டன் ரூ.5,000-க்கு வாங்கியிருப்பார்கள்.
   இப்போது, நமக்குத் தேவையான மின்சாரத்தை ரூ.997 கோடி கொடுத்து வாங்கி வருகிறோம். இதனால் மின் கட்டணம் உயர்ந்து, குடும்பத்துக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
   தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணமும் அதிகரித்ததால், பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து பாதித்துள்ளனர். புதுவையில் தற்போது 1,251 தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. புதுவையின் பொருளாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
   நிலக்கரி ஒதுக்கீட்டை என்எல்சிக்கு வழங்காமல் போனதால், ஆண்டுக்கு ரூ.3,500 கோடி இழப்பு ஏற்படுத்தியதற்கு யார் காரணம் என்பதை கண்டறிய வேண்டும். இந்த ஊழல் குறித்து எந்த கட்சியினரும் ஏன் பேசுவதில்லை?
   மக்கள் ஆதரவில் மீண்டும் நான் எம்பியாக தேர்வானால், இந்த ஊழலை வெளிக்கொண்டுவர எல்லா நடவடிக்கையும் எடுப்பேன் என்றார் பேராசிரியர் ராமதாஸ்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai