சுடச்சுட

  

  புதுச்சேரியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

  By புதுச்சேரி,  |   Published on : 17th April 2014 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான பணிகளை தேர்தல் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

  இதுதொடர்பாக தலைமை தேர்தல் அலுவலர் டி.ஸ்ரீகாந்த் கூறியது:

  புதுச்சேரி தொகுதியில் வரும் 24ஆம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்ட பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாவது பரவலாக்கம் நடத்தப்பட்டு வேட்பாளர் அமைப்பு முறை ஆக்கம் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் செய்யப்பட்டது.

  காரைக்கால் மாவட்டத்தில் 12ஆம் தேதியும், ஏனாமில் 15ஆம் தேதியும், மாஹேயில் 16ஆம் தேதியும் இப்பணிகள் நடந்தன.

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் 24 மணி நேர பாதுகாப்புடன் கூடிய ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முதல் நாள் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அறைகள் திறக்கப்பட்டு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும்.

  பூத் சிலிப் விநியோகம்: வண்ணப்புகைப்படத்துடன் கூடிய வாக்குப் பதிவு சீட்டு (பூத் சிலிப்) வாக்காளர்களுக்கு தரப்படுகிறது. வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வழங்கி ஒப்புதல் பெறுகின்றனர். இப்பணி 18-ஆம் தேதிக்குள் முடியும். வாக்காளர் அடையாள சீட்டை பெறாதவர்கள், வாக்குச்சாவடி மையத்தில் பெறலாம்.

  புதுவை மாநிலம் 100 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட மாநிலம் ஆகும். வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள சீட்டு இல்லாதவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம், பான்கார்ட், தபால் அலுவலக புத்தகம், அரசின் அடையாள அட்டை, அரசு சார் நிறுவன அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை, ஓய்வூதிய ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.

  புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் வேட்பாளர்கள் தங்களின் அனுமதிக்கப்பட்ட தேர்தல் செலவின முகவர்களாக மேலும் 4 பேரை நியமித்துக் கொள்ளலாம்.

  தொகுதி பெரியதாக உள்ளதால், வேட்பாளர்கள் தங்கள் முகவருடன், கூடுதலாக ஒப்புதல் முகவர்களை நியமித்துக் கொள்ள ஆணையம் அனுமதி தந்துள்ளது. தேர்தல் முகவருக்கு உரிய சட்டப்பூர்வ பணிகளை ஒப்புதல் முகவர் செய்ய முடியாது.

  148 தேர்தல் விதிமீறல் வழக்கு: தேர்தலை முன்னிட்டு இதுவரை 148 விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 97 புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் புதுச்சேரி நகர அழகமைப்புச் சட்டத்தின் கீழ் 43, குற்றவியல் சட்டத்தின் கீழ் 41, ஆயத்தீர்வை சட்டத்தின் கீழ் 13 பதியப்பட்டுள்ளன.

  வாக்குப் பதிவு முடியும் நேரத்துக்கு உட்பட்ட 48 மணி நேரத்துக்குள் வாக்குச்சாவடி மையப்பகுதிகளில் எந்த வித கருத்துக் கணிப்போ, ஆய்வுகளை ஊடகங்கள் நடத்தக்கூடாது.

  தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் எதுவும் வெளியிடக்கூடாது என புதிய உத்தரவை ஆணையம் பிறப்பித்துள்ளது என்றார் ஸ்ரீகாந்த்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai