சுடச்சுட

  

  தேர்தல் அதிகாரிகளைக் கொண்டு காங்கிரஸுக்கு ஆளும் கட்சி மிரட்டல்

  By புதுச்சேரி  |   Published on : 18th April 2014 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் அதிகாரிகளைக் கொண்டு காங்கிரஸ் கட்சியினரை ஆளும் கட்சியினர் மிரட்டி வருகின்றனர் என மத்திய அமைச்சர் நாராயணசாமி புகார் கூறியுள்ளார்.

  புதுவையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அலுவலகத்தில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளேன். சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. கடந்த 5 ஆண்டுக் காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன் என்பது குறித்து பட்டியலை வெளியிட்டுள்ளேன்.

  மேலும் ஐஐஎம், ஐஐடி, மத்திய அரசிடம் இருந்து சலுகைகள், அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பிரச்னை, சம்பளப் பிரச்னை ஆகியவற்றை தீர்த்து வைப்பேன்.

  கடந்த 3 ஆண்டாக நாராயணசாமி நிதியை தடுக்கிறார் என கூறாமல், தேர்தல் சமயத்தில் மட்டும் ரங்கசாமி வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் அவதூறுகளை பரப்பி வருகிறார்.

  காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்று ரங்கசாமி கூறியுள்ளார். அவரது பேச்சு துரதிர்ஷ்டவசமானது.

  தேர்தல் அதிகாரிகளை வைத்து காங்கிரஸ் கட்சியினரையும், கட்சிக்கு பணியாற்றுபவர்களையும் மிரட்டும் போக்கை ஆளும்கட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரின் வீடுகளில் திடீரென அதிகாரிகள் நுழைந்து சோதனை செய்துள்ளனர்.

  அவர்களை கட்சி பணியாற்றவிடாமல் மறைமுகமாக மிரட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் கேபிள் டிவி ஒளிபரப்பு முடக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் தேர்தல் தொடர்பான செய்திகளை சாட்டிலைட் சேனல்களும், கேபிள்டிவிக்களும் ஒளிபரப்புவது புதிதல்ல. இதனால் அந்த கேபிள்டிவி சேனல் தங்களது ஒளிபரப்பை தொடர தேர்தல் துறை அனுமதிக்க வேண்டும்.

  ரோடியர் ஆலையை திறந்து விட்டதாக முதல்வரும், அந்த மில்லின் தலைவரும் கூறி வந்தனர். ஆனால் இன்று அந்த ஆலையில் 70 பேர் மட்டுமே வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.

  கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக ரங்கசாமி மாநில அந்தஸ்து வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்தார். ஆனால் தேர்தல் சமயமான தற்போது அதுபற்றி பேசவில்லை.

  மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுவைக்கு தற்போது வரும் நிதியும் குறைந்து போகும். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடர வேண்டும் என்பதுதான் விருப்பம். யூனியன் பிரதேச அதிகாரத்துடன் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 90 சதவீதம் நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும். இதன்மூலம் மாநிலம் வளர்ச்சி பெறும்.

  மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுவையின் பிராந்தியங்களான காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை புதுவையிலிருந்து பிரிய வேண்டிய நிலை ஏற்படும். ஒருங்கிணைந்த புதுவையின் வளர்ச்சிதான் காங்கிரசின் கொள்கை, குறிக்கோள். எனவே புதுவை சிறப்பு அந்தஸ்துடன் யூனியன் பிரதேசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

  இதை கேட்டுப்பெற அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் மேற்கொள்ளும். கடந்த காலத்தில் புதுவைக்கு மட்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. காரைக்கால், மாஹே, ஏனாமை தவிர்த்து மாநில அந்தஸ்து தேவையில்லை என அந்த ஒப்புதலை மறுத்து விட்டோம் என்றார் நாராயணசாமி.

  இந்நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai