சுடச்சுட

  

  புதுவைக்குக் கிடைக்குமா சிறப்புப் பொருளாதார மண்டலம்?

  By புதுச்சேரி  |   Published on : 18th April 2014 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் தொழில் வளம், வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் ஏட்டளவிலேயே நின்று போய் உள்ளது.

  புதுச்சேரியில் தொழில் துறையை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்க கடந்த 2005-ல் மாநில அரசு திட்டமிட்டது. இதற்காக சேதாரப்பட்டு, காரசூர் ஆகிய இடங்களில் 890 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. புதுச்சேரி அரசு நிறுவனமான பிப்டிக் மூலம் கையகப்படுத்திய நிலத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து 18 மாதங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்கான முதலீட்டில் புதுவை அரசு 26 சதவீதமும், மீதித் தொகையை தனியாரும் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

  மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை உள்பட 20-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க திட்டமிட்டன. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு

  வேலைவாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது.

  தொழில் தொடங்க முன்வருவோருக்கு புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருந்து புதுவை துறைமுகத்துக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் 6 வழிப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

  இந்நிலையில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை மேம்படுத்த தில்லி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த 2 தனியார் நிறுவனங்களுக்கு புதுவை மாநில அரசு ஒப்பந்தம் வழங்கியது.

  ஆனால் அந்நிறுவனங்களைத் தேர்வு செய்ததில் வெளிப்படைத்தன்மையும், விதிகளும் பின்பற்றப்படவில்லை. எனவே சிறப்புப் பொருளாதார மண்டல மேம்பாட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

  இதையடுத்து, ஒப்பந்தத்தை புதுவை மாநில அரசு ரத்து செய்தது. இப்பிரச்னை தொடர்பாக தனியார் நிறுவனங்களும் உயர்நீதிமன்றத்தை அணுகின.

  முறையான விதிகளை மாநில அரசு பின்பற்றவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றமும் சிறப்புப் பொருளாதார தொடங்க அனுமதி

  தரமுடியாது எனக் கூறி விட்டது.

  இந்நிலையில், சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் தடைபட்டதற்கு மத்திய அரசு தான் காரணம், மாநில அரசு தான் காரணம் என இரு தரப்பும் புகார் கூறி வருகின்றன.

  இதனால் புதுவையில் படித்த இளைஞர்களுக்கு கிடைக்க இருந்த வேலைவாய்ப்பு கேள்விகுறியானது.

  வேட்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

  காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி: புதுவை மாநில அரசின் தவறான செயல்பாட்டால் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை நீதிமன்றம் நிறுத்தி விட்டது. நான் வெற்றி பெற்றால் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவேன். இதனால் வேலைவாய்ப்பு பெருகும்.

  என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன்: புதுவைக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் மிகவும் தேவையாகும். இதில் உள்ள சிக்கல்களை தீர்த்து மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன்.

  திமுக வேட்பாளர் நாஜிம்: புதுவையில் தற்போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். நான் வென்றால் மீண்டும் இத்திட்டத்தை புதிய வகையில் செயல்படுத்துவேன்.

  அதிமுக வேட்பாளர் ஓமலிங்கம்: இத்திட்டத்துக்காக கரசூர், சேதாரப்பட்டு பகுதிகளில் 860 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் வாழ்வு அழிந்தது. மாநில அரசின் இயலாமையால் இத்திட்டம் கிடப்பிலேயே உள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தை தொடங்க வேண்டும், இல்லையென்றால் நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கே தர வேண்டும்.

  இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் விசுவநாதன்: விவசாயிகளை ஏமாற்றி நிலத்தை பெற்றனர். திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. நான் வெற்றி பெற்றால் இத்திட்டத்தை கொண்டு வருவேன். இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

  பாமக வேட்பாளர் அனந்தராமன்: சிறப்பு பொருளாதார மண்டலம் புதுவைக்கு அவசியமானத் திட்டம். மத்திய, மாநில அரசுகள் செய்த குளறுபடியால் இத்திட்டம் தடைபட்டு நிற்கிறது. நான் வெற்றி பெற்றால் சிறப்பு அனுமதி பெற்று இத்திட்டத்தை நிறைவேற்றுவேன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai