சுடச்சுட

  

  மதுக்கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தியதே ரங்கசாமியின் சாதனை: வைத்திலிங்கம்

  By புதுச்சேரி  |   Published on : 18th April 2014 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை மாநிலத்தில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தியதே முதல்வர் ரங்கசாமி அரசின் சாதனை என எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

  புதுவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து இந்திரா நகரில் எதிர்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் வியாழக்கிழமை பிரசாரம் செய்தார்.

  முத்திரையர்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாகச் சென்று "கை' சின்னத்துக்கு வாக்குச் சேகரித்து அவர் பேசியதாவது:

  முதல்வர் ரங்கசாமி 14 ஆண்டுகளாக கூட்டுறவுத்துறையை தன்வசம் வைத்திருந்தார். ஆனால் கூட்டுறவுத்துறை எந்த வளர்ச்சியும் பெறவில்லை. ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனமாக மூடப்பட்டு வருகிறது. நெசவாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. அவர்கள் தொழில் நசுக்கப்பட்டுள்ளது. அவரது தொகுதியில் மட்டும் பாப்ஸ்கோவில் அனைத்துப் பொருள்களும் கிடைக் கின்றன. மற்ற தொகுதிகளில் பொருள்கள் இல்லாமல் மூடப்பட்டு கிடக்கிறது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

  புதுச்சேரியில் யார் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளர் என்றே தெரியவில்லை. இரு கட்சிகள் மோடியின் படத்தை வைத்து வாக்குச் சேகரிக்கின்றனர். தமிழகம் வந்த மோடியும் இதைப்பற்றி பேசவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ரூ.3-க்கு தரமான ஒற்றை அவியல் அரிசியை வழங்கினோம். அது தவறு, ஊழல் என ரங்கசாமி கூறினார்.

  அரிசி வழங்க 6 மாதத்துக்கு ரூ.48 கோடியை ஒதுக்கினார். 3 மாதம் அரிசி வழங்கினார்கள், 3 மாதம் வழங்கவில்லை. அந்த நிதி எங்கே சென்றதோ தெரியவில்லை.

  மின்சாரம், தண்ணீர், சொத்து வரிகளை அதிகப்படுத்தினார்.

  ஹோட்டல்களில் வாட்வரி உயர்த்தப்பட்டது, பின்னர் வரி குறைக்கப்பட்டது. ஆனால் ஹோட்டல்களில் ஏற்றிய விலையை இறக்கவே இல்லை.

  இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ரூ.ஆயிரத்து 600 கோடி மட்டுமே செலவழித்துள்ளார். ரூ.400 கோடி செலவு செய்யவில்லை.

  நாராயணசாமி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி அதை ஆதாரங்களுடன் பட்டியலிடுகிறார். அதேபோல ரங்கசாமியில் எந்த திட்டத்தை செயல்படுத்தினேன் எனக் கூற முடிகிறதா? அவர் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார். 150 மதுக்கடைகளை 400-ஆக உயர்த்தி புதுவை இளைஞர்களை குடிகாரர்களாக்கியதுதான் ரங்கசாமியின் சாதனை.

  எனவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் வைத்திலிங்கம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai