சுடச்சுட

  

  பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி படத்தையும், பாஜக கொடியையும் பாமக பயன்படுத்தக் கூடாது என்று புதுச்சேரி பாஜக நிர்வாகிகள் தலைமைத் தேர்தல் அலுவலர் டி.ஸ்ரீகாந்திடம் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளும் அவர்களுடன் வந்திருந்தனர்.

  புதுச்சேரியில் பாஜக கொடி, மோடி படத்துடன் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாமகவினர் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். பிரசாரம் முடிவடைய உள்ள நிலையிலும் புதுதில்லி பாஜக இதுவரை புதுச்சேரி வேட்பாளர் தொடர்பாக இறுதி முடிவை அறிவிக்கவில்லை.

  இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ரெட்டியார்பாளையம் மாநில தலைமைத் தேர்தல் அலுவலகத்துக்கு பாஜக மாநில தலைவர் விஸ்வேஸ்வரன் தலைமையில் முன்னாள் மாநிலத் தலைவர்கள் கேசவலு, தாமோதரன், மாநிலச் செயலர் சாமிநாதன், துணைத் தலைவர்கள் பரந்தாமன், தங்க விக்ரமன், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலர் பாலன் ஆகியோர் சென்றனர்.

  அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் சின்னம், கொடி, மோடி படம் ஆகியவற்றை பயன்படுத்தி பாமக வாக்குச் சேகரிக்கிறது. பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்தான் புதுச்சேரியில் உள்ளது. அதனால் பாஜக கொடி, மோடி படத்தை பாமக பயன்படுத்தக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

  இது தொடர்பாக மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன் கூறியதாவது:

  வாக்காளரை குழப்பும் வகையில் பாமக புதுச்சேரியில் செயல்படுகிறது. அதை தவிர்க்க வேண்டும். விரைவில் பாஜக முக்கியத் தலைவர்கள் புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர். புதுச்சேரியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இடையேதான் கூட்டணி உள்ளது. புதுதில்லியில் கட்சித் தலைமையிடம் பேசியதை தொடர்ந்துதான் தேர்தல் அதிகாரியிடம் பாமக மீது புகார் தந்துள்ளோம். கூட்டணித் தொடர்பான முடிவில் தமிழகம், புதுச்சேரி தனி தனியாகதான் முடிவு எடுக்கப்பட்டது என்றார் விஸ்வேஸ்வரன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai