சுடச்சுட

  

  காவிரி, மீனவர் பிரச்னை: காங்கிரஸ், பாஜக ஒரே நிலைப்பாடு

  By புதுச்சேரி,  |   Published on : 19th April 2014 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி மற்றும் தமிழக மீனவர் பிரச்னைகளில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஒரே நிலையைத் தான் கொண்டுள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினரும், மூத்தத் தலைவருமான ஆர்.நல்லகண்ணு குற்றம் சாட்டினார்.

  புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் விசுவநாதனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள வந்த அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

  அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ், பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது. இரு கட்சிகளுக்கும் ஒரே பொருளாதாரக் கொள்கைதான். மாற்றுக் கொள்கையுடைய ஆட்சி வர வேண்டும். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை முழுமையாகத் தர வேண்டும்.

  புதுவையில் பாஜக இரட்டை நிலை: புதுச்சேரியில் தங்கள் கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்தவரா, பாமகவை சேர்ந்தவரா என்று அறிவிக்காமல் மவுனமாக உள்ளது பாஜக.

  தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்ப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார். உண்மையில் குஜராத்தில் உள்ள முஸ்லிம்களின் நிலை ஈழ தமிழர்களை போலதான் உள்ளது. தலித் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

  பாஜக விரிக்கும் மாயவலை: தமிழகத்தில் மீனவர்கள் பாதிப்பு, காவிரிப் பிரச்னை ஆகியவற்றில் காங்கிரஸ், பாஜகவின் செயல்பாடுகள் ஒன்றுதான். காவிரி நீர்ப் பிரச்னை தொடர்பாக எடியூரப்பாவை சந்திக்கச் சென்றபோது அவர் மறுத்து விட்டார். இறுதி வரை அவரை சந்திக்கவே முடியவில்லை.

  பாஜக தலைவர்கள் இலங்கை தமிழர்களைப் பற்றி பேசும் போது, அது உள்நாட்டு விவகாரம் என்றனர். பாஜகவினர் விரித்துள்ள மாயவலையில் சிக்காதீர்கள் என்பதே நாங்கள் மக்களுக்குத் தெரிவிக்கும் கருத்து. புதுச்சேரியில் செல்வாக்கில்லாத பாஜகவை வளர்க்கும் தவறான முடிவை முதல்வர் ரங்கசாமி எடுத்துள்ளார்.

  பிரதமர் அருகிலேயே இருந்து அவரது பேச்சாளராக செயல்பட்டார் நாராயணசாமி. ஆனால் அவர் புதுச்சேரிக்கு அவர் ஏதும் செய்யவில்லை. மாநில அந்தஸ்து குறித்து மாற்றுக் கருத்தை தற்போது தெரிவிக்கிறார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார் அவர்.

  இதையடுத்து, கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை நல்லகண்ணு வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் வேட்பாளர் விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் நாரா கலைநாதன், பொருளாளர் சலீம் ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai