சுடச்சுட

  

  புதுவை மாநில அந்தஸ்து பிரச்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார் என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

  இது தொடர்பாக புதுவை அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர் நாராயணசாமி மாநிலம் தழுவிய பல்வேறு பிரச்னைகளில் மாறி, மாறி கருத்துகளைக் கூறி மக்களை குழப்பி வருகிறார்.

  நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுக ஆகியன மாநில அந்தஸ்து பெற மத்திய அரசை வலியுறுத்தவில்லை.

  11 முறை புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர். காங்கிரஸ் கட்சி மட்டும் 9 முறை மாநில அந்தஸ்து வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தற்போது மாநில அந்தஸ்து கிடைத்தால் மத்திய அரசு நிதி உதவி குறைக்கப்படும் என நாராயணசாமி எடுத்துக்கூறி, அதனால் மாநில அந்தஸ்து தேவையில்லை என தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

  புதுவை மாநிலத்துக்கென 2007-ல் தனிக் கணக்கு துவங்கியது தான் மத்திய நிதி குறைக்கப்பட்டதற்கு காரணம். தனிக் கணக்கை துவங்கியது காங்கிரஸ்தான். அப்போது நாராயணசாமி இதை எதிர்க்கவில்லை.

  தனிக்கணக்கு துவக்கப்பட்ட பின் முதல்வராக இருந்த ரங்கசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினர்.

  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்துச் சென்று நாராயணசாமியும் மாநில அந்தஸ்து வேண்டும் என பிரதமரை சந்தித்து வலியுறுத்தினார்.

  தற்போது தேர்தலுக்காக மாஹே, ஏனாம் பகுதி மக்களை ஏமாற்றுவதற்காக மாநில அந்தஸ்து புதுவைக்குத் தேவையில்லை என நாராயணசாமி கூறியுள்ளார்.

  ஏனாமில் பிரசாரத்தின்போது பத்திரத்தில் மாநில அந்தஸ்து பெற்றுத் தர மாட்டேன் என கையெழுத்துப் போட்டு கொடுத்துள்ளார். இதன் மூலம் புதுவை மக்களை அவர் வஞ்சித்துள்ளார். இதை புதுவை வாக்காளர்கள் உணர்ந்து தேர்தலில் மத்திய அமைச்சர் நாராயணசாமியை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.

  புதுவையின் 4 பிராந்தியங்களும் பாதிக்கப்படாமல் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  மாநிலத்துக்கு நிதி குறையும் என்பதால் சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என அவர் தற்போது கூறுகிறார்.

  மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் செயல்பட முடியாதவாறு மத்திய அரசின் துறைபோல புதுவை இருக்க வேண்டும் என நாராயணசாமி கருதுகிறார். அவருக்கு இத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

  ஆட்சியாளர்கள் செய்யத் தவறிய பல்வேறு பிரச்னைகளால் தேர்தல் புறக்கணிப்பு என்பதை பல இடங்களில் மக்கள் அறிவித்துள்ளனர். இதில் தேர்தல்துறை முழு கவனம் செலுத்த வேண்டும்.

  சின்ன வீராம்பட்டினம், பெரிய வீராம்பட்டினத்தில் பிரசாரத்துக்குச் சென்ற அரசியல் கட்சிகளை அப்பகுதியினர் தடுத்து நிறுத்துகின்றனர்.

  காங்கிரஸ் கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் புறக்கணிப்பு என்ற நாடகத்தை நடத்திவிட்டு நாராயணசாமியிடமும், முதல்வரிடமும் சாதகமான பதிலை பெற்றுக் கொண்டு ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்துகின்றனர்.

  மாவட்ட ஆட்சியர் இப்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அன்பழகன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai