சுடச்சுட

  

  பதவிக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் ரங்கசாமி

  By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பதவி சுகத்துக்காக பாஜகவுடன் முதல்வர் ரங்கசாமி கூட்டணி வைத்துள்ளார். இதை தேசிய நெஞ்சம் கொண்ட புதுவை மக்கள் ஏற்கமாட்டார்கள் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

  புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்துப் பிரசாரம் செய்ய புதுவை வந்த அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

  பதவி சுகத்துக்காக முதல்வர் ரங்கசாமி, மதவாத பாஜகவோடு கூட்டு சேர்ந்துள்ளார். தேர்தலுக்காக கதர் சட்டை, காவி சட்டையாக மாறி விட்டது. புதுதில்லியில் காமராஜர் இல்லத்தை பாஜகவினர் தாக்கிய சம்பவத்தை காங்கிரஸ் தொண்டர்கள் மறக்க மாட்டார்கள்.

  மத்திய அரசு புதுவைக்கு அளித்த நலத் திட்டங்களையும், ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி அளித்த நல்ல திட்டங்களையும் மக்களுக்கு கொடுக்காமல் நிறுத்தியதும், தாமதம் செய்வதும் தற்போதைய புதுவை அரசுதான். புதுவை மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பது ரங்கசாமி அரசுதான்.

  புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு எந்த நிதியையும் வழங்கவில்லை, திட்டங்களை நிறைவேற்றவில்லை என ரங்கசாமி பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்.

  மத்திய அரசிடம் மாநிலத்துக்குத் தேவையான நிதியைப் பெற எந்த நடவடிக்கையும் ரங்கசாமி எடுக்கவில்லை. முதல்வர், 4 அமைச்சர்கள் புதுவைக்காக என்ன செய்தனர்.

  கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை முறை புதுதில்லிக்குச் சென்று திட்டங்களுக்காக கோரிக்கை வைத்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்து விட்டு, தனது அலுவலகத்தில் சோனியா காந்தி படத்தை ரங்கசாமி வைத்திருப்பது முரண்பாடான செயலாகும்.

  புதுவைக்கு நாராயணசாமியால் எண்ணற்றத் திட்டங்கள்:பெரிய மாநிலங்களுக்கு கிடைக்காத திட்டங்களைக் கூட மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுவையில் நிறைவேற்றி உள்ளார்.

  17 ரயில்கள், ரூ.400 கோடியில் கிராமப்புற குடிநீர் மேம்பாடு, 4 மேம்பாலங்கள், காரைக்காலில் கடல்சார் பல்கலைக்கழகம், புதுவையில் ரூ.100 கோடியில் தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் என பல்வேறு சாதனைகளை அவர் புரிந்துள்ளார்.

  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. தமிழகம், புதுவை வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டதே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தான்.

  மோடி அலை மாயை: நரேந்திர மோடி அலை என்பது வெறும் மாயை. எந்த அலையும் வீசவில்லை. தமிழகத்தில் பிரச்னைகளை உடனே தீர்ப்போம் என மோடி கூறியுள்ளது வெறும் கவர்ச்சிப் பேச்சு தான். காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார் வாசன்.

  முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் இ.நமச்சிவாயம், துணைத் தலைவர் பாலாஜி உள்பட பலர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai