சுடச்சுட

  

  புதுவை வளர்ச்சி அடைய என்.ஆர். காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்

  By காரைக்கால்  |   Published on : 21st April 2014 04:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்தியில் அமையும் புதிய அரசின் மூலம் புதுவை வளர்ச்சியடைய என்.ஆர்.காங்கிரஸை ஆதரியுங்கள் என புதுவை முதல்வர் என். ரங்கசாமி வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

  புதுவை தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ராதாகிருஷ்ணனை ஆதரித்து காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் என். ரங்கசாமி வாக்கு சேகரித்துப் பேசியது:

  என்.ஆர். காங்கிரஸ் புதுவை வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், அனைத்துக்கும் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளது. இதையும் மீறி பல்வேறு திட்டங்களை புதுவை அரசு அமல்படுத்தியுள்ளது.

  காரைக்காலில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. என்.ஐ.டி. தொடங்கப்பட்டது. இவைகளை நாராயணசாமி கொண்டு வந்ததாக கூறுகிறார். எல்லா திட்ட அமலாக்கத்துக்கும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது, நிலம் ஒதுக்கித் தந்தது மாநில அரசு. காரைக்கால் துறைமுகம் மூலம் நேரடி, மறைமுகமாக வேலைவாய்ப்பு பெருகியுள்ளது. சுற்றுலா நகரமாக காரைக்காலை கொண்டு வரவும் புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து எம்.பி.யாக இருந்துவரும் நாராயணசாமி புதுவைக்கு ஒன்றுமே செய்யவில்லை. புதுவைக்கு வரவேண்டிய நிதியை தடுத்ததே அவரது சாதனை.

  மத்தியில் அமையும் புதிய அரசில் என்.ஆர். காங்கிரஸ் அங்கம் வகிக்க வேண்டும். இதன்மூலம் புதுவை சிறந்த வளர்ச்சியை அடையும். புதுவை மாநிலம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைய என்.ஆர். காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்றார் முதல்வர்.

  பிரசாரத்தில் அமைச்சர் மு. சந்திரகாசு, புதுவை பாஜக மாநில செயலரும் காரைக்கால் மாவட்ட பொறுப்பாளருமான எம். அருள்முருகன், வாரியத் தலைவர்கள் கே. கோவிந்தராஜ், ஆ. சுரேஷ், கே.ஆர். உதயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai