சுடச்சுட

  

  புதுச்சேரியில் கடந்த ஒரு மாத காலமாக அனல் பறந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்கிறது.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 24-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

  புதுச்சேரி தொகுதியில் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக 6 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தனித்தனி அணியாக போட்டியிடுகின்றன.

  புதுச்சேரி தொகுதியில் 11 கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 30 பேர் களத்தில் உள்ளனர்.

  வேட்புமனு தாக்கல் துவங்கிய கடந்த மார்ச் 29-ம் தேதி முதல் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதுவரை தொகுதிவாரியாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள், ஊர் பிரபலங்களை வேட்பாளர்கள் சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர்.

  வேட்புமனு தாக்கல் முடிந்த ஏப்ரல் 5-ம் தேதி முதல் திறந்த ஜீப்பில் வேட்பாளர்கள் வீதி, வீதியாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

  காங்கிரஸ் வேட்பாளர் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியின் பிராந்தியப் பகுதிகளான காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கும் சென்று அந்தப் பகுதி எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாராய ணசாமிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் வந்து பிரசாரம் செய்தனர்.

  ஆளும்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி முழுவதும் திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.

  புதுச்சேரி பாஜகவினரும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

  அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுச்சேரிக்கு வந்து பிரசாரம் செய்தார். மேலும் அதிமுக பேச்சாளர்களான நடிகர்கள் ராமராஜன், விந்தியா, பாத்திமாபாபு, தியாகு உள்பட பலர் பிரசாரம் செய்தனர்.

  திமுக வேட்பாளர் நாஜிமை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டத்திலும், பொருளாளர் ஸ்டாலின் புதுச்சேரி முழுவதும் 18 இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.

  பாமக வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி கிராமப்புற பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டினார். மோடியின் படத்துடன் பிரசாரம் செய்யும் வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவாக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் விஸ்வநாதனை ஆதரித்து தேசியச் செயலாளர் டி.ராஜா, தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மூத்த கம்யூனிஸ்ட் நிர்வாகி நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

  இதைத் தவிர ஆம் ஆத்மி வேட்பாளர் ரங்கராஜன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) பழனி, சுயேச்சை வேட்பாளர் முன்னாள் எம்பி ராமதாஸ் ஆகியோரும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்களைத் தவிர மற்ற சுயேச்சைகளும் தங்கள் பங்கிற்கு மக்களை கவரும் வகையில் தங்கள் சின்னங்களுடன் பிரசாரம் செய்து வருகின்றனர்.

  தேர்தலுக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக நடந்து வந்த அனல்பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

  அதன் பிறகு தேர்தல் தொடர்பான பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவை நடத்த அனுமதி கிடையாது. இது மட்டுமின்றி எஸ்எம்எஸ், பேஸ்புக், டிவிட்டர், டிவி, ரேடியோ போன்ற நவீன பிரசாரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பிரசாரம் மேற்கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai