சுடச்சுட

  

  புதுவையில் காங்கிரஸ் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா?

  By புதுச்சேரி  |   Published on : 22nd April 2014 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தை ஒட்டியுள்ள சிறிய யூனியன் பிரதேசம் புதுச்சேரி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோகன் குமாரமங்கலம், பாரூக் மரைக்காயர், நாராயணசாமி, அதிமுகவின் பாலா பழனூர் ஆகிய மத்திய அமைச்சர்களை அளித்த தொகுதி புதுவையாகும்.

  தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்ட பின் இத்தொகுதியில் மொத்தம் உள்ள 4 பிராந்தியங்களில் புதுவையில் 23 பேரவைத் தொகுதிகளும், காரைக்காலில் 5 தொகுதிகளும்,

  ஏனாம், மாஹேயில் தலா ஒரு பேரவை தொகுதியும் உள்ளன.

  இத்தொகுதி உருவாக்கப்பட்டபின் நடந்த முதல் தேர்தலில் 1967-ல் காங்கிரஸ் கட்சியின் என்.சேதுராமன் வெற்றி பெற்றார். கடந்த 2009ஆம் ஆண்டு வரை நடந்துள்ள தேர்தல்களில் அதிகபட்சமாக காங்கிரஸ் 9 முறையும், திமுக, அதிமுக, பாமக தலா ஒருமுறையும் வென்றுள்ளன.

  கடந்த 1967-ல் என்.சேதுராமன் (காங்கிரஸ்), 1971-ல் எஸ்.மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்), 1977-ல் அரவிந்த் பாலா பழனூர் (அதிமுக), 1980, 1984, 1989-ல் ப.சண்முகம் (காங்கிரஸ்), 1991, 1996-ல் எம்.ஓ.எச்.பாரூக் (காங்கிரஸ்), 1998-ல் எஸ்.ஆறுமுகம் (திமுக), 1999-ல் எம்.ஓ.எச். பாரூக் (காங்கிரஸ்), 2004-ல் எம்.ராமதாஸ் (பாமக), 2009-ல் வி.நாராயணசாமி (காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

  கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ராமதாஸை 91,672 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். கடந்த 2011ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி முதன்முறையாக 15 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

  பல்வேறு சமூகத்தினர் வசிக்கும் தொகுதி: புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்கள் தமிழகத்தை ஒட்டியும், ஏனாம் ஆந்திர மாநிலத்தை ஒட்டியும், மாஹே கேரள மாநிலத்தை ஒட்டியும் உள்ளன. இத்தொகுதியில் வன்னியர் இனத்தவர் பெரும்பான்மையானவராக உள்ளனர்.

  அவர்களுக்கு அடுத்து தாழ்த்தப்பட்டோர், மீனவர்கள், இதர சமூகத்தினர் உள்ளனர்.

  ஆனால் புதுச்சேரி மக்கள் பெரும்பாலும் ஜாதி அடிப்படையில் வாக்களிப்பதில்லை.

  யூனியன் பிரதேசமாக உள்ளதாலும், ஜிப்மர், மத்திய பல்கலைக்கழகம் போன்ற பெரிய நிறுவனங்கள் அமைந்துள்ளதாலும் வெளி மாநிலத்தவரும் அதிகம் வசிக்கின்றனர்.

  தொகுதியின் முக்கிய பிரச்னைகள்: புதுச்சேரிக்கு தனியாக மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையாக ரூ.5 ஆயிரம் கோடி உள்ளது. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதும் மற்றொரு கோரிக்கை. இதைத் தவிர கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு ரயில் பாதை, கண்கவர் சுற்றுலாத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

  செயலிழந்த பொதுத்துறை நிறுவனங்களை சீரமைக்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  6 முனைப் போட்டி: நாராயணசாமி (காங்கிரஸ்), ராதாகிருஷ்ணன் (என்ஆர்.காங்கிரஸ்), ஓமலிங்கம் (அதிமுக), நாஜிம் (திமுக), அனந்தராமன் (பாமக), விஸ்வநாதன் (இந்தியகம்யூனிஸ்ட்) களத்தில் இருப்பதால் 6 முனைப் போட்டி உருவாகி உள்ளது.

  ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ரங்கராஜன், முன்னாள் எம்.பி. டாக்டர் ராமதாஸ்

  ஆகியோரும் களத்தில் நிற்பவர்களில் முக்கியமானவர்கள்.

  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமி தொடர்ந்து 18 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகவும், கடந்த 5 ஆண்டுகள் மக்களவை உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் உள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைமை, பிரதமர் மன்மோகன் சிங்குடன் மிகவும் நெருக்கமானவர். தான் கொண்டு வந்த திட்டங்களை சொல்லி ஆதரவு திரட்டுகிறார். கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனியாக வலம் வருகிறார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவரான கண்ணன் எம்.பி. ஆதரவும் இவருக்கு கிடைக்கவில்லை.

  ஆளும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவாக இருந்தவர். முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இவர் முதல்வர் ரங்கசாமியின் செல்வாக்கு, பாஜக ஆதரவு, மோடி அலை துணையோடு தேர்தலை சந்திக்கிறார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் பாமக தனியாக போட்டியிடுவது இவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

  திமுக சார்பில் போட்டியிடும் எச்.நாஜிம் தொடர்ந்து 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக உள்ளதால் நன்கு அறிமுகமானவர். காரைக்கால் பகுதியில் தனி செல்வாக்கு உள்ளது.

  விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் கட்சிகள் துணையோடு வாக்கு சேகரிக்கிறார்.

  புதுவையில் கட்சியினரைதான் நம்பி உள்ளார். கருணாநிதி, ஸ்டாலின் பிரசாரம் செய்துள்ளனர்.

  அதிமுக சார்பில் போட்டியிடும் ஓமலிங்கம், காரைக்கால் பகுதியில் நன்கு அறிமுகமானவர் முதல்வர் ஜெயலலிதா இவரை ஆதரித்து பிரசாரம் செய்தார். கூட்டணி கட்சிகள் இல்லாமல் அதிமுக நிர்வாகிகளே இவருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

  பாமக வேட்பாளர் அனந்தராமன் தேமுதிக, மதிமுக, ஐஜேகே, போன்றவற்றின் துணையோடு தேர்தலை எதிர் கொள்கிறார். இவர் போட்டியிடுவது என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

  கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் விசுவநாதன் தொழிலாளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். அவரால் குறிப்பிட்ட அளவுக்கே வாக்குகள் பிரியும்.

  புதுச்சேரி தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் தொகுதிகளாக காரைக்காலில் உள்ள 5 தொகுதி, மாஹே, ஏனாம் என 7 தொகுதிகளே இதுவரை வெற்றியை நிர்ணயித்து வந்தன. காங்கிரஸுக்கு இந்த 3 பிராந்தியங்களும் மிகப் பெரும் பலம். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை காரைக்காலில் 5 தொகுதிகளையும் சேர்த்து ஒன்றரை லட்சம் ஓட்டுகளில் 60 சதவீத ஓட்டை காங்கிரúஸ பெற்று வந்தது. ஆனால் தற்போது காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த ஓமலிங்கம் அதிமுக சார்பிலும், நாஜிம் திமுக சார்பிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் காங்கிரஸின் ஓட்டை பிரித்துவிடுவார்கள் என்பதால் அனைத்துத் தொகுதியிலும் சராசரி ஓட்டையே காங்கிரஸ் பெறும்.

  ஆனால் மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளில் உள்ள 60 ஆயிரம் ஓட்டுகளில் 80 சதவீத ஓட்டை காங்கிரஸ் பெறும். இந்த ஓட்டுகளை ஈடு செய்யும் வகையில் முதல்வர் ரங்கசாமியின் கோட்டையான கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய தொகுதிகளில் 60 ஆயிரம் ஓட்டுகளில் 80 சதவீத ஓட்டை என்.ஆர்.காங்கிரஸ் பிடித்துவிடும்.

  மற்ற தொகுதிகளில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் சரிசமமாக ஓட்டுகளை பிரிக்கும். அதிலும் இம்முறை அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதால் வெற்றியை நிர்ணயிப்பதில் பிராந்தியங்களே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. ஆனால் இம்முறை யார் வெற்றி பெற்றாலும் ஓட்டுகளின் வித்தியாசம் சொற்பமாகவே இருக்கும்.

  காங்கிரஸ் கட்சிக்கும், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. எனினும் திமுக, அதிமுக கட்சிகளும் இவர்களுக்கு ஈடுகொடுத்து வருகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai