சுடச்சுட

  

  சமூக விரோத சக்திகளை கட்டுப்படுத்த முதல்வர் ரங்கசாமி தவறிவிட்டார்: நாராயணசாமி பேச்சு

  By புதுச்சேரி,  |   Published on : 23rd April 2014 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் சமூக விரோத சக்திகளை கட்டுப்படுத்த முதல்வர் ரங்கசாமி தவறிவிட்டார் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

  புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமி ராஜ்பவன், வில்லியனூர் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார். திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து நாராயணசாமி பேசியதாவது:

  நாட்டின் ஒற்றுமைக்கும், மதச்சார்பின்மைக்கு ஊறு விளைக்காத ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். அதற்கு மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். நீங்கள் கடந்த முறை வெற்றி பெறச் செய்ததால் தான் பல திட்டங்களை புதுச்சேரிக்கு கொண்டுவர முடிந்தது. மீனவ மக்களுக்கு பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் செய்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு தாயுள்ளத்தோடு ரூ.900 கோடி ஒதுக்கியது. வீடு கட்டவும், அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவும் இந்த நிதியை மத்திய அரசு கொடுத்தது.

  ஆனால் ரங்கசாமி அந்த பணத்தை சுனாமியால் பாதித்த மீனவர்களுக்கு செலவிடாமல் வேறு துறைகளுக்கு செலவு செய்தார். காங்கிரஸ் அரசு வழங்கிய இலவச அரிசி திட்டம், மீன்பிடி தடை கால நிவாரணம், முதியோர் உதவித்தொகை, படகு வாங்க மானியம், டீசல் மானியம் போன்றவை காலத்துடன் வழங்கப்பட்டது.

  இவை எதையும் ரங்கசாமி வழங்கவில்லை. அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டார்.

  சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் நலனில் அக்கறை செலுத்தாத அரசாக என்ஆர்.காங்கிரஸ் அரசு உள்ளது. வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலை ரங்கசாமி தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் தற்போது மீண்டும் ஓட்டுகளை பெறுவதற்காக உங்களிடம் வருகிறார்.

  அவரது வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட போது நான் உடனடியாக பிரதமரை தொடர்புகொண்டு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி 34 மீனவர்களை மீட்டு வந்தேன். இதற்காக கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தவிட்டதாக கருதி ரங்கசாமி புதுச்சேரியிலேயே இருந்துவிட்டார். மக்கள் கடமையை மறந்தவர்கள் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும். அதற்கு இந்த தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  கொடுத்த வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி தவறாமல் நிறைவேற்றும். குறிப்பாக அரும்பார்த்தபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டித்தருவேன் என அளித்த ஓட்டுறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. 100 அடி சாலையில் பாலம் ஆகியவை மத்திய அரசின் முழு நிதியின் மூலம் கட்டப்பட்டு வருகின்றன.

  சுற்றுலாவை மேம்படுத்தி வில்லியனுõர் திருக்காமீஸ்வரர் கோவில் செப்பனிடும் பணிக்காக ரூ.5 கோடி மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கியது. ஆனால் மாநிலஅரசு இதுவரை அந்த நிதியை செலவிடவில்லை. புதுச்சேரியில் சட்டஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

  கட்டபஞ்சாயத்து, வீடு அபகரிப்பு, கொலை, கொள்ளை நாள்தோறும் அரங்கேறி வருகிறது. உள்துறை பொறுப்பு வகிக்கும் ரங்கசாமி இதை வேடிக்கை பார்த்து வருகிறார். ரங்கசாமி ஆட்சியில் பாதுகாப்பான வாழ்விற்கு உத்திரவாதம் இல்லை. பட்டப்பகலில் கொலை நடக்கிறது. தொழிலதிபர்களின் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர். கோலம்போடக்கூட பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியவில்லை. இதை செய்யும் சமூகவிரோத சக்திகளை கட்டுப்படுத்த ரங்கசாமி தவறிவிட்டார் என்றார் நாராயணசாமி.

  லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., காமராஜர் நகர் வட்டார காங்கிரஸ் செயலாளர் வினோத், உள்பட பலர் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai