சுடச்சுட

  

  வாக்காளர்களுக்கு வழங்க மதுபானம் வாகன சோதனையில் சிக்கியது

  By புதுச்சேரி,  |   Published on : 23rd April 2014 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு வழங்க மதுபானங்கள் கடத்திச் சென்றதைப் புதுவைப் போலீஸார் மற்றும் கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.

  புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி ஜீவானந்தபுரத்தில், செவ்வாய்க்கிழமை காலை வாக்காளர்களுக்கு சிலர் மதுபாட்டில்கள் வழங்கியதாகத் தெரிகிறது. இது குறித்து தகவல் தெரிந்த கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

  அப்போது, ஜீவானந்தபுரம் பகுதியில் மதுபாட்டில்களுடன் நின்றிருந்த கும்பல் அதனை போட்டுவிட்டு தப்பியோடிவிட்டது. ஏராளமான மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், எந்த கட்சியினர் மதுபாட்டில்களை வாங்கி வழங்கினார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

  முத்தியால்பேட்டை பகுதியில் போலீஸார் ஆய்வு செய்தபோது, 191 டெட்ரா பாக்கெட் மதுபானங்களை கடத்திச் சென்ற, லாஸ்பேட்டை மடுவுப்பேட்டைச் சேர்ந்த நரசிங்கத்தை(33) கைது செய்தனர். அதே பகுதியிலிருந்து கடத்திச் சென்ற இளையராஜா, வசந்த், பிரகாஷ் ஆகியோரிடமிருந்து 450 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  கிருமாம்பாக்கத்தில் வாகன சோதனையின்போது, பைக்கில் வந்த கோயம்புத்துரைச் சேர்ந்த டேவிட்மதன்(25) என்பவரிடமிருந்து 30 மதுபாட்டில்களும், தூக்கனாம்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித்திடமிருந்து 90 மதுபாட்டில்களும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  இதே போல், ஒதியஞ்சாலைப் பகுதியில் 414 மது பாட்டில்களும்,

  பெரியகடை பகுதியில், விநாயகம், பிரபு ஆகியோரிடமிருந்து 304 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மதுபாட்டில்கள் கலால் துறையில் ஒப்படைக்கப்பட்டன.

  இதே போல் தாசில்தார் குமரன் தலைமையிலான கலால் துறையினர் சோதனையில், 1,500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai