சுடச்சுட

  

  இன்று வாக்குப்பதிவு: 4,000 துணை ராணுவத்தினர், போலீஸார் குவிப்பு

  Published on : 24th April 2014 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 4,000 துணை ராணுவத்தினர், போலீஸார் பாதுகாப்புடன் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

  நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த 7-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 5 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ளது. 6-ம் கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் வியாழக்கிழமை தேர்தல் நடக்கிறது.

  இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடக்கம்.

  புதுச்சேரி தொகுதியில் 11 அரசியல் கட்சிகள்  உள்பட 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தனித்தனி அணி அமைத்து போட்டியிடுவதால் 6 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட கடந்த 9-ம் தேதி முதல் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன. புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும், தொகுதி வாரியாக, வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் வலம் வந்து வேட்பாளர்கள் வாக்குச் சேகரித்தனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்தனர். கடந்த 15 நாள்களாக நடந்து வந்து அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

  வியாழக்கிழமை காலை 7 மணிக்கு  வாக்குப் பதிவு  தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் துறை அனைத்து விரிவான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

  905 வாக்குச் சாவடிகள்: தேர்தல் களத்தில் 30 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. புதுச்சேரியில் 684, காரைக்காலில் 154, மாஹேயில் 32, ஏனாமில் 35 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 905 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  2,800 வாக்குப்பதிவு இயந்திரங்கள்: வாக்குச் சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 2,800 இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வெயிலில் நிற்காமல் இருக்க தேவையான இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர் வரிசையில் நிற்க முடியாது என்பதால் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்தளங்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

  அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவைக் கண்காணிக்க வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 89 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

  இவற்றில் மிகவும் பதற்றம் நிறைந்த 30 வாக்குச் சாவடிகளில் வெளியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்காக 3,325 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் அமைதியாக நடைபெற மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  இதுதவிர 7 கம்பெனி துணை ராணுவப் படையினரும் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பணியிடம் ஒதுக்கப்பட்டு அந்தந்த வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  புதுச்சேரியில் மொத்தம் 9,01,357 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 4,32,154, பெண்கள் 4,69,283 மற்றும் 20 திருநங்கைகள் இடம்பெற்றுள்ளனர். 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் துறை தீவிர விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டது. தேர்தல் துறை மூலம் வண்ணப்படத்துடன் கூடிய அடையாளச் சீட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் வழங்கப்பட்டது.

  இந்த அடையாளச் சீட்டை கொண்டு வந்தாலே வாக்களிக்க முடியும். வாக்காளர் அடையாள அட்டையை தவற விட்டவர்கள், அடையாள சீட்டை பெறாதவர்கள் தேர்தல் கமிஷன் வழிகாட்டியுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி தங்கள் வாக்கை செலுத்தலாம்.

  தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதிக அளவு விழிப்புணர்வு, புதிய வாக்காளர்கள், பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடக்கும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் இம்முறை வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai