சுடச்சுட

  

  மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், விசைப்படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியை காரைக்கால் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.

  மீன்களின் இனப் பெருக்க காலமான ஏப். 15 முதல் மே 31-ம் தேதி வரை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்காலத்தில் புதுச்சேரி அரசு மூலம் மீனவக் குடும்பங்களுக்கு உதவித் தொகை, அரிசி வழங்கப்படும். விசைப்படகு, பைபர் படகுகள் சீரமைப்புக்கு குறிப்பிட்டத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

  தடைக்காலம் தொடங்கி ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில், மீனவர்கள் தங்களது படகுகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சீரமைக்கும் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

  சில படகுகளில் என்ஜின் அகற்றப்பட்டு, வெளியூருக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. படகுகளுக்கு முற்றிலும் புதிதாக வண்ணம் பூசும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

  மீனவர்கள் சிலர் வலைகளை பின்னும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடைக்காலமான 45 நாள்களுக்குள் தங்களது பயன்பாட்டில் உள்ள படகுகள் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுவிடும். வருமானம் இல்லாத காலம் என்றாலும்கூட, பாதுகாப்பு மிக்கதாக படகை தயார்படுத்த கால அவகாசம் கிடைப்பது ஒருவகையில் மகிழ்ச்சியாகவே இருக்கிறது என்கின்றனர் மீனவர்கள்.

  குடும்பத்துக்கு தடைக்கால நிவாரணம் ரூ. 4 ஆயிரம், மற்றும் படகுக்கான சீரமைப்பு நிவாரணம் ரூ. 20 ஆயிரம் என கடந்த ஆண்டில் தரப்பட்டது.

  இந்த  தொகையை சற்று உயர்த்தித் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai