சுடச்சுட

  

  புதுவையிலிருந்து காணாமல் போயிருந்த பொறியாளரை போலீஸார் மதுரையிலிருந்து மீட்டு வந்து புதன்கிழமை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

  புதுவை கோரிமேடு ராமராஜ் நகரைச் சேர்ந்த இளங்கோ மகன் பாலகுமார் (26). பொறியியல் பட்டதாரி. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வீóட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நாள்களாக தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

  இதுகுறித்து, கோரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். நீண்ட நாள்களாக தகவல் ஏதும் கிடைக்காததால் அச்சமடைந்த பாலகுமாரின் தந்தை இளங்கோ, மகனை கண்டுபிடித்து தர உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.  ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அவரை கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவினையடுத்து, புதுவை கோரிமேடு போலீஸார் மற்றும் தெற்குப் பகுதி சிறப்பு அதிரடிப்படை போலீஸார், பாலகுமாரைத் தீவிரமாக தேடி வந்தனர். அவர், மதுரையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து செவ்வாய்க்கிழமை மதுரை சென்ற போலீஸார், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் நடமாடிக்கொண்டிருந்த பாலகுமாரை பிடித்தனர்.

  அவரிடம் போலீஸார் விசாரித்ததில், கடன் பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்ததாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்ட போலீஸாரை சீனியர் எஸ்பி ஓம்வீர் சிங் பாராட்டினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai