சுடச்சுட

  

  புதுச்சேரி தொகுதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி மற்றும் வேட்பாளர்கள் தத்தமது வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர்.

  காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான வி.நாராயணசாமி காலை 7.30 மணிக்கு புஸ்ஸி வீதியில் உள்ள பொதுப்பணித் துறை கழிவுநீர் உட்கோட்டக் கட்டடத்தில் வாக்களித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை நினைவில் வைத்து என்னை மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள். நான் புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். 17 ரயில்கள், ரூ.642 கோடி செலவில் 4 மேம்பாலங்கள், கிராமப்புற குடிநீர்த் திட்டம் கொண்டு வந்துள்ளேன். நான் வென்றால் புதுவையில் ஐஐஎம், ஐஐடி, தகவல் தொழில்நுட்பப் பூங்கா, புதுவையை அழகுப்படுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்வேன்.

  புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களும் சேர்ந்திருக்க வேண்டும். தனி மாநில அந்தஸ்து கிடைத்தால் இவை துண்டாகிவிடும். எனவே காங்கிரஸ் கட்சி புதுச்சேரி யூனியன் பிரதேசமாக மட்டுமே தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது என்றார்.

  முதல்வர் ரங்கசாமி: முதல்வர் ரங்கசாமி தனது வீட்டில் இருந்து காலை 10.35 மணிக்கு தனது பைக்கில் கதிர்காமம் தொகுதிக்கு உள்பட்ட திலாசுப்பட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

  முன்னதாக அங்கிருந்த முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

  வாக்களித்த பின் முதல்வர் ரங்கசாமி கூறியது: என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மத்திய அமைச்சர் நாராயணசாமி யூனியன் பிரதேசமாக புதுவை தொடரும் எனக் கூறியுள்ளாரே எனக் கேட்கிறீர்கள், மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் புதுவையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும். அதனால் எங்கள் கட்சியின் முக்கிய கோரிக்கையாக தனி மாநில அந்தஸ்து உள்ளது என்றார்.

  பின்னர் முதல்வரின் தாயார் பாஞ்சாலி அம்மாள் (91) அதே வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

  என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன்: என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் உழவர்கரையை அடுத்த ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் வ.சுப்பையா அரசு நடுநிலைப் பள்ளியில் காலை 11 மணிக்கு வாக்களித்தார்.

  இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் விசுவநாதன்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதன் சித்தன்குடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகத்தில் காலை 7 மணிக்கு வாக்களித்தார். அவருடன் அவரது தந்தை 104 வயதான தியாகி ராஜமாணிக்கமும் வாக்களித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai