சுடச்சுட

  

  வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: சில இடங்களில் வாக்குப் பதிவு தாமதம்

  By புதுச்சேரி,  |   Published on : 25th April 2014 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரம் திடீரென பழுதானதால் வியாழக்கிழமை வாக்குப் பதிவு தாமதமாயின.

  கரியமாணிக்கம்: புதுவை நெட்டப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட கரியமாணிக்கம் பகுதியில், அரசு பள்ளி வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சோதனை வாக்கு போட்டனர். அதன் பின், வாக்குபோட முயன்றபோது இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தடைபட்டது.

  இது குறித்து புதுவை தேர்தல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேர தாமதத்துக்குப் பின் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

  திருக்கனூர் (புதுக்குப்பம்): திருக்கனூர் அருகே உள்ள தமிழகப் பகுதியான விக்கிரவாண்டி தொகுதிக்கு உள்பட்ட புதுக்குப்பம் அரசு ஆரம்ப பள்ளி வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுப் தொடங்கியது. சுமார் 7.30 மணிக்கு திடீரென வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானது. .

  பின்னர் மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேர தாமதத்துக்குப் பின் வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கியது. இங்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்குப் பதிவுக்கு அனுமதிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

  மண்ணாடிப்பட்டு: மண்ணாடிப்பட்டுத் தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் போது சில இடங்களில் பூத் ஏஜெண்டுகள் வர தாமதம் ஆனதால், சிறிது நேரம் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

  முதலியார்பேட்டை: முதலியார்பேட்டை சுதானா நகர் தனியார் பள்ளி வாக்குச் சாவடியில் பிற்பகல் 2.15 மணி அளவில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் நிறுத்தப்பட்டது. இதன் பின் மாற்று வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு வந்து மீண்டும் மாலை 3.15 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

  பாகூர்: பாகூர் கஸ்தூரிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி, காலனிப் பகுதி வாக்குச் சாவடிகளில், காலை வாக்குப் பதிவின் போது, 100 மீட்டர் எல்லைக்கோட்டிற்கு அருகே நின்றிருந்த அரசியில் கட்சியினர் சிலர் போட்டி போட்டு வாக்குச் சேகரித்தனர்.

  இதனால் பிரச்னை ஏற்பட்டதால் போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். கிருமாம்பாக்கம் பகுதியில் வயதானவர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்வதில் கட்சியினரிடையே பிரச்னை ஏற்பட்டது. அவர்களையும் போலீஸார் அப்புறப்படுத்தினர்.

  இதேபோல் புதுவைப் பகுதியில் சில இடங்களில் சிறு பிரச்னைகளுடன் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai