சுடச்சுட

  

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான, அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது.

  யூனியன் பிரதேசமான புதுவையில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது.

  நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த 7-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ளன. 6-ம் கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது.

  இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடக்கம்.

  புதுச்சேரி தொகுதி தேர்தல் களத்தில் 11 அரசியல் கட்சிகள் உள்பட 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி,, என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் எம்.வி.ஓமலிங்கம், திமுக சார்பில் எச்.நாஜிம், பாமக சார்பில் ஆர்.கே.அனந்தராமன், இந்தியகம்யூனிஸ்ட் சார்பில் ஆர்.விசுவநாதன் உள்ளிட்டோர் தனித்தனியாகப் போட்டியிடுவதால் 6 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட கடந்த 9-ம் தேதி முதல் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன. புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும், வேட்பாளர்கள் வாக்குச் சேகரித்தனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவர்களும் பிரசாரம் செய்தனர்.

  கடந்த 15 நாள்களாக நடைபெற்ற அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

  அமைதியான வாக்குப்பதிவு: தொகுதி முழுவதும் உள்ள 905 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதல் மக்கள் விறுவிறுப்பாக தேர்தல் விழா போல் சாரை சாரையாக வாக்களிக்கச் சென்றனர். வாக்குப்பதிவு தொடங்கி காலை 9 மணி வரை 16 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

  பின்னர் 11 மணி நிலவரத்தின்படி 35 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

  கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பொதுமக்களும், ஏராளமான பெண்கள் கைக் குழந்தைகளுடனும் வாக்குச் சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

  கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இயங்கவில்லை. அதற்கு மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டும் அதிலும் கோளாறு ஏற்பட்டது. இந்நிலையில் ஒன்றரை மணி நேரம் கழித்து 8.30 மணிக்கு கோளாறு சரி செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai