சுடச்சுட

  

  வீராம்பட்டினத்தில் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 25th April 2014 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவை தொகுதியில் உள்ள வீராம்பட்டினம் மீனவ கிராமத்தினர் சுனாமி வீடுகள் கட்டித் தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை தேர்தலைப் புறக்கணித்தனர். இதை கண்டித்து அரசியல் கட்சியினர் சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது.

  அரியாங்குப்பத்தை அடுத்து வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம் என இரு மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் மொத்தம் 7,000 பேர் வசித்து வருகின்றனர். 5,300 வாக்காளர்கள் உள்ளனர்.

  இந்நிலையில், கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலைத் தாக்கி 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்தன. இவர்களில் 300 பேருக்கு மட்டுமே மகாராஷ்டிர மாநில உதவியுடன் வீடுகள் கட்டித் தரப்பட்டன. மீதமுள்ள 1,200 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படவில்லை.

  மாநில அரசிடம் பலமுறை கோரியும் வீடுகள் கட்டப்படவில்லை. மேலும் முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலாளர், ஆட்சியரிடம் முறையிட்டும், கறுப்புக் கொடி ஏற்றுதல், கடலில் படகுகளில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.

  தேர்தல் புறக்கணிப்பு: இதையடுத்து, வீராம்பட்டினம் மீனவ கிராமத்தினர் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என அறிவித்திருந்தனர். தேர்தல் பிரசாரம் தொடங்கிய நிலையிலும் வேட்பாளர்கள் யாரையும் இக்கிராமத்தில் பிரசாரம் செய்ய அனுமதிக்கவில்லை.

  இதனால் இக்கிராமத்தில் துணை ராணுவப் படையினர், போலீஸார் குவிக்கப்பட்டனர்.

  கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்காமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் துறை அதிகாரிகள், போலீஸார் ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்தனர்.

  தகவல் மையத்துக்கு சீல்: இந்நிலையில், வில்லியனூர் வட்டாட்சியரும், தேர்தல் துறை அதிகாரியுமான யஷ்வந்த்தையா மற்றும் காவல் துறையினர் வீராம்பட்டினம் மீனவர் கிராமத்துக்கு சென்று மீனவர் பஞ்சாயத்தாரை விசாரித்துவிட்டு அங்குள்ள தகவல் மையத்துக்கு சீல் வைத்தனர்.

  மீனவர் தகவல் மையத்திலிருந்து "வாக்களிக்க வேண்டாம்' என ஒளிபரப்பப்பட்டதாலும், தற்போது மீன்பிடி தடைக்காலம் இருப்பதாலும் இத்தகவல் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இந்நிலையில், வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் மொத்தம் 5 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகள் வெறிச்சோடிக் கிடந்தன. தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் மட்டுமே காணப்பட்டனர்.

  கட்சிகள் சாலை மறியல்: தேர்தலை புறக்கணிக்குமாறு கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியினரும் நால் ரோடு சந்திப்பில் திடீர் மறியல் செய்தனர்.

  தகவல் அறிந்து எஸ்.பி. தெய்வசிகாமணி மற்றும் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். தேர்தல் புறக்கணிப்பு செய்யுமாறு கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததால் மறியல் கைவிடப்பட்டது.

  அதிகாரிகள் தொடர்ந்து கிராம மக்களிடம் தேர்தல் புறக்கணிப்பை கைவிடுமாறு கூறியும் பலனில்லை. அவர்களை சூழ்ந்து கொண்டு பெண்கள் சரமாரியாகக் கேட்ட கேள்விகளுக்கு

  அதிகாரிகளால் பதிலளிக்க முடியவில்லை. இதனால் வீராம்பட்டினம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

  இந்த தேர்தல் புறக்கணிப்பால் மாலை வரை 1,443 வாக்குகளே பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai