சுடச்சுட

  

  புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து ரயில் சேவை அதிகரித்துள்ள நிலையில், புதுவை ரயில் நிலையத்தில் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரே ஒரு ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து புது தில்லி, கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புதுவை சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதே போல் ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். வெளி மாநில நோயாளிகளும் சிகிச்சை பெற ஜிப்மருக்கு வருகின்றனர். இதனால் புதுச்சேரி ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும்.

  ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.), அரசு ரயில்வே காவல் துறை (ஜி.ஆர்.பி.) ஆகிய இருபிரிவுகள் உள்ளன. தமிழகத்தில் இப்பிரிவில் தனியாக கூடுதல் டிஜிபி தலைமையில் ஜஜி, காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஆகிய பொறுப்புகள் உள்ளன. மேலும் விழுப்புரம், திண்டிவனம், சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் ஆகிய பல இடங்களில் ஜி.ஆர்.பி. காவல் நிலையங்கள் உள்ளன.

  ஆனால் புதுவை ரயில் நிலையத்தில் காவல் நிலையமோ, ஜி.ஆர்.பி. போலீஸ் பிரிவோ இல்லை. இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவது புதுச்சேரி காவல் துறையினர்தான். அவர்கள்தான் கூடுதலாக அப்பணியை செய்கின்றனர்.

  இதுதொடர்பாக புதுச்சேரி காவல் துறை வட்டாரங்கள் கூறியது: ரயில்வேயில் இரு பிரிவு காவல் துறையினர் உள்ளனர். ஆர்.பி.எப். காவல் துறையினர் ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளை செய்வார்கள். ரயில் நிலையங்களில் நடக்கும் தகராறுகள், ரயில் விபத்து, ரயிலில் விழுந்து தற்கொலை, ரயிலில் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக ஜி.ஆர்.பி. காவல் துறையினர்தான் வழக்குப் பதிவு செய்ய முடியும். ஏனெனில் இச்சம்பவங்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் (ஐபிசி) வருகிறது.

  புதுச்சேரியில் ஜி.ஆர்.பி. போலீஸ் பிரிவு இல்லை. இதனால் ரயில்வே பகுதியில் நடைபெறும் அனைத்து குற்றங்கள் தொடர்பாகவும் புதுச்சேரி காவல் துறையினர்தான் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால் புதுச்சேரி காவல் துறையினருக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படுகிறது.

  புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து முன்பு குறைந்த ரயில்கள்தான் இயக்கப்பட்டன. தற்போது 17 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் காரைக்காலிலும் கூடுதல் ரயில் சேவைகள் அதிகரித்துள்ளன. எனவே புதுவையில் ரயில்வே காவல் நிலையம் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது என்றனர். புதுச்சேரி ரயில் நிலையம் தெற்கு ரயில்வேயின் திருச்சிக் கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதுதொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியது: புதுச்சேரி, காரைக்கால் ரயில் நிலையங்களில் இருந்து தற்போது கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. ஜி.ஆர்.பி. காவல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக திருச்சி கோட்ட மேலாளர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ஜஜி ஆகியோர் புதுச்சேரி அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர் என்றனர்.

  இதுகுறித்து புதுச்சேரி மாநில டிஜிபி ஆர்.காமராஜ் கூறியது: புதுச்சேரியில் தனியாக அரசு ரயில்வே காவல் பிரிவு (ஜி.ஆர்.பி.) இல்லை. புதுவையில் ரயில்வே பகுதியில் நடைபெறும் குற்றச் செயல்கள் குறித்து புதுவை காவல் துறையினரே விசாரிக்க வேண்டியுள்ளது. தனியாக ரயில்வே காவல் பிரிவு தொடங்குவது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai