சுடச்சுட

  

  புதுவையில் தேர்தல் முடிந்த நிலையிலும், கடந்த சில நாள்களாக தேர்தல் விதிகளை மீறியவர்கள், தேர்தல் தினம் வரை வாக்காளர்களுக்குப் பணம் வழங்கிய அரசியல் கட்சியினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

  புதுவைத் தொகுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் பறக்கும் படைகள் அமைத்து, தேர்தல் விதிமீறல்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

  இதன் மூலம் தேர்தல் நாள் வரை 480 புகார்கள் பெறப்பட்டு, 200 புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்டத் தேர்தல் அதிகாரி தீபக்குமார் தெரிவித்தார். எனினும் மேலும் புகார்கள் பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தேர்தல் துறையினர் கூறுகின்றனர்.

  புதுவை முத்தியால்பேட்டை புளியந்தோப்பு பகுதியில், புதன்கிழமை இரவு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சோலை நகர் போலீஸார் தலைமைக் காவலர் மைக்கேல் தலைமையில் சென்று ஆய்வு செய்தனர்.

  அங்குள்ள சாராயக்கடை அருகே வாக்காளர்களுக்கு மதுபாட்டில்கள் இலவசமாக கொடுத்துக்கொண்டிருந்த, சோலை நகரைச் சேர்ந்த இளங்கோவை (27) போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், அவர் எந்தக் கட்சிக்கு ஆதரவாக இலவசங்கள் வழங்கினார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

  முத்தியால்பேட்டை சாலைத் தெரு சந்திப்பில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, ஓட்டுக்கு பணம் வழங்கியதாக, புதுவை சாரம் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாரி மகன் பிரகாஷை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.13 ஆயிரம் பணம் மற்றும் வாக்காளர் பட்டியலை பறிமுதல் செய்தனர். அவர் எந்தக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்று விசாரிக்கின்றனர்.

  வில்லியனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், அதிகாரி பாலமுருகன் தலைமையில், வியாழக்கிழமை காலை சோதனை நடத்தினர். அப்போது, கனுவாப்பேட்டை வன்னியர் தெருவில், தேர்தல் விதிகளை மீறி காங்கிரசுக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரம் வழங்கியதாக ரமேஷை (26) கைது செய்தனர். அவரிடமிருந்து துண்டு பிரசுரங்களை பறிமுதல் செய்தனர்.

  திருபுவனை பகுதியில் வியாழக்கிழமை காலை பறக்கும் படை அதிகாரி இளஞ்செழியன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது, மதகடிப்பட்டு சாலையில், கலித்தீர்த்தாள் குப்பம் பகுதியில், வாக்குக்குப் பணம் கொடுத்துக்கொண்டிருந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் வாக்காளர் பட்டியலை கீழே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

  அங்கிருந்த ரூ.1,200 பணம் மற்றும் பட்டியலை பறிமுதல் செய்து, திருக்கனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  இதே போல், புதுவை முழுவதும் பல தொகுதிகளில், சில அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை பணம் வழங்கியதாக மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

  தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையிலும், வாக்களிக்க பணம் கொடுத்தவர்கள் மீதும், தேர்தல் விதிமீறல் செய்தவர்கள் மீதும் போலீஸார் தற்போது வரை வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

  இதுகுறித்து கேட்டபோது, தேர்தல் அவசரப் பணிகள் காரணமாக புகாருக்கு ஆளாகும் நபர்களை பிடித்து காவல் நிலையங்களில் தேர்தல் துறையினர் ஒப்படைத்து வருகின்றனர். குற்றம் உறுதிப்படுத்த போதிய ஆவணங்கள் திரட்டியும், நீதிமன்றத்தில் அனுமதி பெற்றும் வழக்குப் பதிவு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai