சுடச்சுட

  

  : ஆழ்கடல் விசைப்படகு மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், காரைக்காலில் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

  மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி 45 நாள்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஏப். 15 முதல் தொடங்கியுள்ளது.

  காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களில் இருந்து சிறிய வகை பைபர் மோட்டார் படகு மூலம், குறைந்த தொலைவு கடலுக்குச் சென்று மீன்பிடிக்க தடையில்லை என்பதால், இப்படகுகளில் மட்டுமே மீன்கள் பிடித்து வரப்படுகின்றன.

  விசைப்படகு மூலம் பிடித்துவரப்படும் பெரிய வகையைச் சேர்ந்த திருக்கை, காக்க மீன், வஞ்ஜிரம், கொடுவா போன்ற மீன்கள் வரத்து முற்றிலும் இல்லை. வலை மீன் என்னும் சங்கரா, காலா, பன்னா, கெளுத்தி, பாரை போன்ற மீன் வகைகளும், சிறிய அளவுடைய இறால், நண்டு மட்டுமே தற்போது கிடைக்கிறது. சிறிய வகை கடல் கொடுவா, கெண்டை கிடைக்கிறது. காரைக்கால் சந்தைக்கு முன்புபோல வரத்து இல்லாததால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

  இதுகுறித்து இந்தப் பகுதி மக்கள் கூறியது:

  மீன்கள் ஐஸ்-ல் வைக்காமல் சுத்தமாகக் கிடைக்கிறது. ஆனால், முன்பைவிட 30 - 40% வரை விலை அதிகமாக விற்கிறார்கள். காரைக்காலில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஆழ்கடலில் பிடித்து ஐஸ்-ல் வைத்திருக்கும் வஞ்ஜிரம் கிலோ ரூ. 700 வரை விற்கிறார்கள். முன்பு இந்த மீன் ரூ. 300-க்கு விற்பனையானது. 10 நாள்களைக் கடந்து ஐஸ்-ல் வைத்த மீன்களை சமைக்கும்போது உதிர்ந்து வீணாகிவிடும். இது உடலுக்கு கேடானதுமாகும். இதை கண்டறிந்து மீன்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, கடலில் குறைந்த தொலைவில் பைபர் படகுகளில் அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு 7, 8 மணிக்கு திரும்பிவிடுவோம். இவ்வகை குறுகிய தொலைவில் சிறிய வகை மீன்கள்தான் கிடைக்கும். சந்தையில் பெரிய மீன்கள் வரத்தின்மையால், சிறிய வகை மீன்களின் விலை உயர்ந்திருக்கிறது என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai