Enable Javscript for better performance
நகராட்சி குப்பையால் விஷமாகும் கிராமங்கள்!பா.சுஜித்குமார்- Dinamani

சுடச்சுட

    

    நகராட்சி குப்பையால் விஷமாகும் கிராமங்கள்!பா.சுஜித்குமார்

    By புதுச்சேரி  |   Published on : 28th April 2014 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள் குப்பையைக் கொட்டுவதால் புதுச்சேரி-தமிழக கிராமப் பகுதிகளில் ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டைப் போக்க, மாற்றுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    புதுச்சேரி மற்றும் தமிழகம் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களான பெரம்பை, கோபாலன்கடை, குரும்பாம்பட்டு பகுதி ஆகிய இடங்களில் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் குப்பை மேடுகள் உருவாகி வருகின்றன.

    இதை எதிர்த்து கிராம மக்கள் பலவித போராட்டங்களை நடத்தியப்படி இருக்கின்றனர். தங்கள் ஆரோக்கியம் குறித்து இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பெரம்பை அம்மாநகர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் கூறியது:

    முன்பு நாவற்குளம் பகுதியில்தான் குப்பையைக் கொட்டினர். விமான நிலைய விரிவாக்கம் நடக்க இருந்ததாலும், குப்பையால் அதிக பறவைகள் பறந்ததாலும் விமானங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் குப்பைக்கொட்டும் இடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மாற்றினர்.

    சில மாதங்களில் இதை சரிசெய்து விடுவோம் என்றனர். ஆனால், பல ஆண்டுகளாகியும் அவை அகற்றப்படமால் குப்பை மலைகள்தான் உருவாகி வருகின்றன. இந்த குப்பையால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பலவித நோய்களால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.

    இப்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி கூறுகையில், இக்குப்பைக்கு சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் எழும் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறலும், இருமலும் ஏற்படுகிறது. இந்த புகையாலும், காற்றடிக்கும் போது குப்பையிலிருந்து எழும் தூசியாளும் பலருக்கும் ஆஸ்துமா வந்து விட்டது. குழந்தைகளும் பெரியவர்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

    நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு: இந்த குப்பையால் நிலத்தடி நீர் மாசுப்பட்டுள்ளதாகச் சிலர் தெரிவித்தனர். மேலும் மருத்துவக் கழிவுகள் அதிகளவில் கொட்டிச் செல்வதால் அதிலிருந்து உருவாகும் பயங்கர கிருமிகளுக்கு மத்தியில் வாழ வேண்டியுள்ளதாக குறிப்பிடுகின்றனர் சிலர்.

    கிராமத்து இளைஞர்கள் சிலர் கூறியது: இப்பகுதி புதுவை-தமிழக பகுதிகள் கலந்த பகுதியாகும். அதனால் இரு பகுதிகளில் இருந்தும் குப்பை அதிகளவில் கொட்டப்படுகிறது. புதுச்சேரி, உழவர்கரையிலிருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரி, டிராக்டர்களில் குப்பை கொட்டப்படுகிறது. மேலும் இக்குப்பையை தரம் பிரிக்காமல் அப்படியே கொட்டுகின்றனர். இதனால் அதிக அளவில் பயனடைபவர்கள் குப்பை லாரி ஒப்பந்ததாரர்கள்தான்.

    மறுசுழற்சி திட்டம் இல்லை: குப்பை சேகரிக்க வருவோர் அதை சில நேரங்களில் தீவைத்து எரித்து விடுகின்றனர். குப்பையை மறுசுழற்சி செய்யவும், குப்பையிலிருந்து உரம், மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகளே இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாமல், கிடப்பில் போட்டுள்ளனர்.

    குப்பையைக் கையாள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இல்லை. இதனால் கொசுத் தொல்லையும் அதிகரித்து மக்கள் நோயாளிகளாக மாறிவிட்டனர் என்றனர் இளைஞர்கள். எனவே, புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி நிர்வாகங்களால் கொட்டப்படும் குப்பையை முறையாக தரம் பிரித்து, நவீன முறையில் அவற்றை கையாள நகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai