சுடச்சுட

  

  போதிய நீர் பருகினால் சிறுநீரகக் கற்களைத் தவிர்க்கலாம்

  By புதுச்சேரி,  |   Published on : 28th April 2014 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போதிய அளவு நீரைப் பருகினால் சிறுநீரகக் கற்கள் பாதிப்பை தவிர்க்கலாம் என்றார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ரத்தின ஜனார்த்தன்.

  புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் மருந்தாளுநர்களுக்கான தொடர் மருந்தியல் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திட்ட இயக்குநர் எச்.ரங்கநாத் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் எம்.அன்புச்செல்வன் வரவேற்றார். மருந்தாளுநர்கள் உஷாராணி, சங்கர் தொகுப்புரை ஆற்றினர்.

  "சிறுநீரக கற்களும், நவீன சிகிச்சை முறைகளும்' என்ற தலைப்பில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ரத்தின ஜனார்த்தன் பேசியது:

  சிறுநீரகம், சிறுநீர் வெளியேறும் பாதை, சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளில் தோன்றும் கற்கள் பொதுவாக கால்சியம் ஆக்ஸ்லேட், டிரிப்பிள் பாஸ்பேட், யூரிக் அமிலம் சிஸ்டின் போன்றவை ஆகும்.

  கற்கள் தோன்றுவதற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியவில்லை என்றபோதும், நீர்ச்சத்து வெளியேறும் போது கல்கள் உருவாகின்றன. கோடைகாலங்களில் அதிகளவு நீர் வியர்வை மூலம் வெளியேறும் போது உடம்பில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீர் மூலம் கழிவுபொருள்கள் வெளியேறுவது தடைபடுகிறது.

  அந்த கழிவுகளே பின்னர் கற்களாகின்றன. கிருமி நோய்த் தாக்குதலாலும் கல்கள் ஏற்படுகின்றன. ஆண்களே பெரும்பாலும் சிறுநீரக கல்களால் பாதிக்கப்படுகின்றனர். சிறிய வகை கற்கள் பெரும்பாலும் சிறுநீரில் வெளியேறி விடும். 3 மி.மீ. அளவுக்கு மேல் உள்ள கல்களே பாதிப்பை ஏற்படுத்தும். இடுப்பின் பக்கவாட்டில் வலி, தொடை வரை வலி பரவுதல், வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம், சீழ் வெளியேறுதல், சிறுநீர் வெளியேறும் போது வலி ஆகியவை அறிகுறிகளாகும்.

  எக்ஸ்ரே, ஐவிபி, அல்ட்ரா சவுண்டு, சிடி ஸ்கேன் போன்றவை மூலம் இதை அறியலாம். பல்வேறு வகை சிகிச்சைகள் மூலம் சிறுநீரக கல்களை வெளியேற்றலாம். எந்த வகையான கற்கள் என்பதை கண்டறிந்து அவ்வகை கற்களின் தாதுக்கள் நிறைந்த உணவை கைவிட வேண்டும்.

  உப்பின் அளவைக் குறைத்து, தக்காளி, கால்சியம் வகை உணவுகளை குறைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் பருகினால் சிறுநீர் கற்கள் ஏற்படுவதை தடுக்கலாம் என்றார் ரத்தின நடராஜன்.

  அரசு மருந்தாளுநர்கள், ஜிப்மர், குளுனி, மதர் தெரசா, தேசிய சுகாதார இயக்கம், தனியார் மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் அரவிந்தன், ஸ்ரீதரன், ராஜேந்திரன், ராமசாமி ஜெயபால், வெற்றிவேல், அஜய் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai